குறுஞ்சுருள்களின் காலம்: மனிதன் தன்னை இழக்கும் டிஜிட்டல் சகாப்தம்

⚡️ சமூக பகுப்பாய்வு

குறுஞ்சுருள்களின் காலம்: மனிதன் தன்னை இழக்கும் சகாப்தம்

✍ கிருஸ்ணா அம்பலவாணர் | 📅 ஜூன் 2026

இந்த மந்தைத்தனம் (Herd Mentality) தான் இன்றைய மிகப்பெரிய ஆபத்து.

இன்று நாம் வாழும் காலம் குறுஞ்சுருள்களின் காலம் (Age of Reels and Shorts). ஒரு காலத்தில் மனிதர்கள் புத்தகங்களிலும், நீண்ட உரையாடல்களிலும் தங்கள் சிந்தனையை வளர்த்துக்கொண்டனர். இன்று அந்த இடத்தை 15 வினாடி முதல் 60 வினாடி வரையிலான குறுஞ்சுருள்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்தக் குறுஞ்சுருள்கள் வெறும் பொழுதுபோக்கு கருவிகள் அல்ல; அவை மனித மனதை மறுசீரமைக்கும் சக்திவாய்ந்த ஆயுதங்களாக மாறிவிட்டன.

குறுஞ்சுருள்கள் காண்பது
குறுஞ்சுருள்களின் காலம் — மனித மனதை மறுசீரமைக்கும் சக்திவாய்ந்த ஆயுதங்கள்

சமூக ஊடகங்கள் மனிதர்களின் இயல்பான விருப்பங்களை முதலில் பற்றாக மாற்றுகின்றன. பின்னர் அந்தப் பற்றை வெறியாக உயர்த்துகின்றன. வெறி என்பது சிந்தனையின் எதிரி. அது மனிதனை வன்மம் கொண்டவனாகவும், பகைமை உணர்வு நிறைந்தவனாகவும் மாற்றுகிறது. ஒரு குறுச்சுருள் ஒரு கோபத்தைத் தூண்டுகிறது. அடுத்த சுருள் அந்தக் கோபத்தை வெறுப்பாக வளர்க்கிறது. சில நிமிடங்களில் ஒரு மனிதன் கூட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறான். அவன் தனது தனித்தன்மையை, விமர்சன சிந்தனையை, தன்னுணர்வை இழந்து, ட்ரெண்ட் எனும் அலையில் மிதக்கத் தொடங்குகிறான்.

ஒரு சுருள் ஒரு தலைவரை தெய்வமாக உருவாக்குகிறது. இன்னொரு சுருள் எதிரியை பேயாக சித்தரிக்கிறது. இந்தச் சுருள்கள் உண்மையை அல்ல, உணர்ச்சியை விற்கின்றன.

இந்த மாற்றம் தேர்தல் அரசியலில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அரசியல் கட்சிகள் குறுச்சுருள்களை ஆயுதமாக பயன்படுத்துகின்றன. தேர்தல் முடிந்த பிறகும் இந்த வெறி தொடர்கிறது. அது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் — மொழி, மதம், சாதி, பிராந்தியம் — புகுந்து, மக்களை மந்தை போல் நடக்க வைக்கிறது.

இந்த மந்தைத்தனம் (Herd Mentality) தான் இன்றைய மிகப்பெரிய ஆபத்து. மனிதன் தனது மூளையை தொலைத்துவிட்டு, கூட்டத்தின் போக்கை பின்பற்றத் தொடங்குகிறான். அவன் தனித்து சிந்திக்க பயப்படுகிறான். அவன் வேறுபட்ட கருத்தை வெளிப்படுத்த பயப்படுகிறான். இது ஜனநாயகத்தின் அடிப்படையையே அரித்துவிடும் ஆபத்து.

1980களில் விழிப்புணர்வுக் கலைகள் மூலம் தன்னார்வ அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கின. இன்று அந்த வேலை மிகவும் அவசரமாக தேவைப்படுகிறது. ஆனால் அது பழைய முறையில் செய்ய முடியாது. அறிவார்ந்த தளங்களில் இயங்கும் தனிநபர்களும், அமைப்புகளும் இணைந்து புதிய விழிப்புணர்வு இயக்கத்தை உருவாக்க வேண்டும்.

குறுச்சுருள்களின் வெறியை எதிர்க்க ஆழமான உரையாடல்கள், விமர்சனப் பகுப்பாய்வுகள், சிந்தனை வட்டங்கள் தேவை. செயல்பாட்டுக் குழுக்கள் உருவாக்கி, மீடியா கல்வியறிவு (Media Literacy) மக்களிடையே பரப்ப வேண்டும். இல்லையெனில், நாம் அனைவரும் சிந்திக்காத ஒரு மந்தையாக மாறிவிடுவோம்.

குறுச்சுருள்கள் நம் காலத்தின் மிகப்பெரிய சவால். அவற்றை நிராகரிக்க முடியாது. ஆனால் அவற்றின் ஆபத்தை புரிந்துகொண்டு, எதிர்-சக்தியை உருவாக்குவது நம் கடமை. இல்லையெனில், ஒரு நாள் நாம் அனைவரும் தன்னை இழந்த மனிதர்களாக மட்டுமே எஞ்சுவோம்.

"செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்."
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.
குறள் எண்: 869  |  அதிகாரம்: பகைமாட்சி
கி
கிருஸ்ணா அம்பலவாணர்
ஈழத்தமிழன் | திராவிடத் தமிழ்த்தேசிய சிந்தனையாளன்
⚡️ மந்தைத்தனத்திற்கு எதிராக · விமர்சன சிந்தனை · மீடியா கல்வியறிவு அவசியம்

Post a Comment

0 Comments