கருப்பு ஜூலை: தமிழ் மக்களின் மனங்களில் இன்னும் ஆறாத வடு, நீதிக்காக தொடரும் வரலாற்றுப் போராட்டம்

வரலாற்று நினைவு | கருப்பு ஜூலை 43

தமிழ் மக்களின் மனங்களில் மாறாத வடுவாக இருக்கின்ற 'கருப்பு ஜூலை'

✍ கிருஸ்ணா அம்பலவாணர் | 📅 ஜூலை 2026

ஈழப்போராட்டம் வெறுமனே ஒரு இனவாதப் போராட்டம் அல்ல; மாறாக ஒரு புரட்சிகரமான அரசியல், சமூக, பண்பாட்டு, கலை மறுமலர்ச்சிக்கான வரலாற்று விடுதலைப் போராட்டம். அது புரட்சிகர சமூக விடுதலைப் போராட்டம், சுயநிர்ணய விடுதலைப் போராட்டம் என்கிற வெளிப்படுத்தல்கள் சர்வதேசத்திற்கும் சென்று சேர்ந்தன.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு, 'கருப்பு ஜூலை'யை மறந்துவிட முடியாதபடியான பல பதிவுகளை வரலாற்றில் பதிந்து வைத்திருக்கிறது. அண்மைய நீர்கொழும்பு சிறைச்சாலைப் பதிவுகள், அந்த வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்துபவையாக அமைந்துவிட்டிருக்கின்றன. கருப்பு ஜூலைக்கு 43 வயதாகிறது. ஆனால், அதன் வடு இன்னமும் சிறிதளவும் சரிசெய்யப்படவில்லை; மேலும் மேலும் நினைவுபடுத்தப்படுவதாகவே இருந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நாட்டில் நல்லிணக்கம் பற்றியும், தேசிய ஒருமைப்பாடு பற்றியும், முழுநாடும் ஒன்றாக என்பது பற்றியும் பேச முயல்கையில், கவனத்திலெடுக்கப்பட வேண்டியவை பற்றி எல்லோரும் மறந்துவிடுகிறோம்.

கருப்பு ஜூலை 1983 நினைவு
கருப்பு ஜூலை 1983 — 43 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடு

1983.07.23 அன்று, ஈழத் தமிழ் இனத்திற்கு எதிரான சிறிலங்கா இனவாத அரசின் உச்சபட்ச ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றப்பட்ட நாடு தழுவிய இனத்துவ வன்முறையாகவே 'கருப்பு ஜூலை' அனைவராலும் பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணம் - திருநெல்வேலி தபால்பெட்டி சந்திக்கு அருகில், தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் எரியூட்டப்பட்டது. இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டன. குண்டுவெடிப்பில் பலியான இராணுவத்தினரின் உடல்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னணியில், இலங்கைத் தீவு முழுவதிலும் தமிழருக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன.

கொழும்பு, மலையகம், காலி, கம்பஹா, கண்டி எனப் பல்வேறு இடங்களிலும் வசித்த தமிழர்களது உடமைகள் அழிக்கப்பட்டன. சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டு, தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, பலர் உயிருடன் எரியூட்டப்பட்டனர். வடக்கு-கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் வசித்த தமிழர்கள், வடக்கு-கிழக்கு நோக்கி அகதிகளாக இடம்பெயர வேண்டிய நிலை உருவானது. இந்த அவலம், அரசின் ஆதரவுடன்தான் ஒழுங்குபடுத்தி அரங்கேற்றப்பட்டது என்பது அனைவருக்கும் வெளிப்படை. கருப்பு ஜூலை கலவரம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டாலும், அவை முழுமையானவை என்ற ஒப்புதல்கள் இதுவரையில் இல்லை. அக்காலப்பகுதி முதல் நாட்டைவிட்டுப் புலம்பெயரத் தொடங்கியவர்கள், இன்னமும் உலகம் முழுவதிலும் பரந்து கிடக்கின்றனர்.

இதன் எதிரொலிகளில் ஒன்றுதான், ஆயுதப் போராட்டத்தில் அதிக இளைஞர்கள் இணைவதற்குக் காரணமாக அமைந்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிருந்தவர்களும், தோற்றியவர்களும், க.பொ.த. உயர் தரத்தில் கற்கப் புகுந்தவர்களும் தங்கள் கல்வியைத் தியாகம் செய்து கொண்டு, அலை அலையாக ஆயுதப் போராட்டப் பயிற்சிக்காக இந்தியாவுக்கும், யாழ்ப்பாணத்திற்கும், கிழக்கின் காடுகளுக்குள்ளும் புகுந்தனர்; ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்த இன உணர்வும், ஆக்ரோஷமும் தமிழர்களின் விடுதலையையும், உரிமைகளையும், அபிலாஷைகளையும் உறுதிப்படுத்துவதற்கு அடிகோலியது.

விடுதலை உணர்வும், உணர்ச்சிக் கொந்தளிப்பும், உணர்ச்சிகளின் உச்சமும், எதிரொலியும் கொண்ட இலங்கைத் தீவு, 1984 நடுப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தின் வெளிப்பாடுகளைக் கடுமையாக இனங்காணத் தொடங்கியது. இயக்கங்களின் அரசியல் பிரச்சாரங்களும், இயக்கங்கள் தொடர்பான கருத்தாடல்களும், பயிற்சிகளும், இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களும் படிப்படியாக வளர்ச்சியும் உக்கிரமும் கொள்ளத் தொடங்கின.

ஈழப்போராட்டம் வெறுமனே ஒரு இனவாதப் போராட்டம் அல்ல; மாறாக ஒரு புரட்சிகரமான அரசியல், சமூக, பண்பாட்டு, கலை மறுமலர்ச்சிக்கான வரலாற்று விடுதலைப் போராட்டம்.

இந்தப் பின்புலத்தில் உருவெடுத்த விடுதலைப் போராட்டம், பல்வேறு கட்ட வளர்ச்சிகளைக் கண்டு சர்வதேச மட்டத்தில் புகழ்படைத்தபோதும், விடுதலைப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற இயக்க உட்கட்சி உள்முரண்பாடுகள், அதிகாரப் போட்டி, சகோதரப் படுகொலைகளுக்கு வித்திட்டதுடன், விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் துரோக அரசியல் பதிவினையும் உருவாக்கியது. இதன் விளைவு திம்பு பேச்சுவார்த்தை; பின் 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம்; இந்திய அமைதிகாக்கும் படைகளின் வருகை; இந்திய இராணுவத்தின் கொடூரச் செயற்பாடுகள். இதன் விளைவாக 1989இல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறல்; பின்னர் நடைபெற்ற நோர்வே மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைகள் வரையில் பயன் எதனையும் தந்துவிடவில்லை. இவ்வாறு தமிழர்களின் அரசியல் வரலாறு சின்னாபின்னமாகிப் போய் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மிகக் கடுமையாக நடைபெற்ற ஆயுத யுத்தம் முடிவுக்கு வந்து 17 வருடங்களாகியும், இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்காக சுயநிர்ணய உரிமையுடனான தீர்வெதுவும் முன்வைக்கப்படவில்லை. பழைய அரசாங்கமாக ஆகிவிட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான புதிய 'தேசிய மக்கள் சக்தி' அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று கூறியிருந்தபோதிலும், அது இதுவரையில் நடைபெறவில்லை. இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டபோதே, இது அடுத்த தேர்தலுக்கான முன் முயற்சியே தவிர, இந்த ஆட்சிக்காலத்தில் இது நிறைவேற வாய்ப்பில்லை என்கிற விமர்சனம் இருந்து வந்தது. அதனை உண்மையாக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் நகர்வுகள் இருந்து கொண்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்புகள், காணாமல் போதல், கைதுகள் என யுத்தத்தின் கோர விளைவுகள் உலக யுத்த நியதிகளையும் மீறி நடந்தேறின. அவற்றுக்கான நியாயங்களைக் கேட்டவர்கள் சலிப்பு நிலைக்குச் சென்றுவிட்டனர். போராடியவர்கள், போராடுபவர்கள், மறுப்பவர்கள், இறப்பவர்கள் என இலங்கைத் தீவிலும் சர்வதேசத்திலும், இத்தீவில் வாழும் புலம் பெயர்ந்தவர்களும், இலங்கை இனத்துவ அடையாளங்களை நிரூபிப்பதற்கு குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

போராட்டம் மௌனித்து இரு தசாப்தங்களாகின்ற வேளையிலும், போராட்டம் உருவானமைக்கான காரணங்களுக்கான தீர்வுகளை அடையமுடியாதபடியான நிலைமையே காணப்படுகிறது. இது நாடுகளின் தலைமைகளின் இயலாமை, சர்வதேச நாடுகளின் அமைப்புகளின் இயலாமை என்று கூட சொல்லிக் கொள்ள முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகள், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் பல நடைபெற்றுவிட்டன. இருந்தாலும், அவற்றின் முடிவுகளில் பயன் ஏதும் விளையவில்லை. பிரேரணைகள் கொண்டுவரப்படுவதும், அவற்றிற்கெதிராக இலங்கையின் அரசாங்கங்கள் பதில்களையும், மறுப்புகளையும், விளக்கங்களையும் முன்வைப்பதனையும் காண்கிறோம். அவை மேலும் மேலும் காலங்கடத்தல்களான இழுத்தடிப்புகளையே பதிலாக்கக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில், தமிழினத்தின் அரசியல் சக்தியாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது சின்னாபின்னமாகிப் போய், தமிழர்களுக்கான அரசியல் வழிகாட்டிகள் இல்லை என்ற நிலைமையைத் தோற்றுவித்துவிட்டது. புலிகளின் மௌனிப்பின் பின் தமிழ்த் தேசிய அரசியலுக்கான கோரம் மாறி, சுயநல அரசியல் ஆரம்பமாகியது. பின்னர் வந்த தேர்தல்களில் அந்தச் சுயநல இருப்பின் உச்சகட்டங்களைக் காணமுடிந்தது. கடந்த தேர்தலில் வடக்குத் தமிழ் மக்கள் சலித்துப் போனவர்களது முடிவொன்றைக் காண்பித்திருந்தனர். இருப்பினும், இனிவரும் தேர்தலிலும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், கட்சிகள் தம்மைச் சீர்செய்து கொள்ளுமா என்பது புரியாத புதிரே.

தமிழர்களுடைய அரசியலைச் சரியான முறையில் மேற்கொள்வதற்கான அரசியல் சக்தி தமிழர்களுக்கே தேவை. அதற்கான ஒருமைப்பாட்டுடன் கூடிய ஒற்றுமையான தமிழ்த் தேசிய அரசியல் சக்திக்கான வேண்டுகோள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இதற்கான வேண்டுகோள்கள் முன்வைக்கப்படுவது மாத்திரமே நடைபெறுகிறது. இந்த ஜூலையும் அதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறிருக்கையில், நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கு நாட்டில் ஸ்திரமானதொரு தலைமைச் சக்தி இல்லையா என்கிற கேள்வியை இந்த இடத்தில் உருவாக்குகிறது. தமிழர்களின் அரசியல் தலைமைகள் சரியான வகையில் முடிவுகளுக்குள் இல்லையானால், நாட்டு மக்களுக்கான தீர்வினைத் தரவேண்டிய அரசாங்கம் இதற்குப் பின்நிற்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

எது எவ்வாறானாலும், தமிழ் மக்களின் மனங்களில் மாறாத வடுவாக இருக்கின்ற 'கருப்பு ஜூலை' மாத்திரமல்ல, நடைபெற்ற படுகொலைகள் அத்தனைக்குமான தீர்வு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றி வைப்பதே என்பதனை அரசாங்கமும் பேரினவாதத் தரப்பினரும் உணராத வரையில், 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' மனோபாவம் இருக்கத்தான் செய்யும்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் நடைபெற்ற இந்த 'கருப்பு ஜூலை' காலக்கட்டம், மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியே தீரும். போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட, மறைக்கப்படும் பல விடயங்கள் இருந்தாலும், மறந்துவிடும் விடயமாக 'கருப்பு ஜூலை' மாறப்போவதில்லை என்பது மாத்திரமே உறுதியானது. அதற்கான ஏதுக்களை யார் உருவாக்குவார்கள் என்பதனைத்தான் நாம் எப்போதும் தேடவேண்டியிருக்கிறது.

கி
கிருஸ்ணா அம்பலவாணர்
ஈழத்தமிழன் | திராவிடத் தமிழ்த்தேசிய சிந்தனையாளன்
🕯 கருப்பு ஜூலை 1983 · 43 ஆண்டுகள் · மறக்கப்படாத வடு

Post a Comment

0 Comments