🔥நவீன நக்கீரன்களும் நாம்தமிழர் கட்சி சீமானும்.. ஆரோக்கியமான அரசியலை விழுங்கும் ஆபாசப் புதைகுழி!
".....நமது சமூகத்தின் விவாத வெளியை ஆபாசச் சாக்கடைகளில் இருந்து மீட்டெடுத்து, கொள்கை ரீதியான அறிவுத்தளத்திற்கு கொண்டு செல்ல முற்படும் நோக்கில், சமூக ஊடகங்களில் சீமான் அவர்கள் மீது நடத்தப்படும் தனிநபர் ஆபாசத் தாக்குதல்கள் மற்றும் அநாமதேய அவதூறுகள் கண்டிக்கத்தக்கவை, ஏனெனில் அவை ஆரோக்கியமான அரசியல் விமர்சன எல்லையைத் தாண்டி ஈழத்தமிழர் மாண்பைக் கொச்சைப்படுத்துகின்றன. கொள்கை ரீதியான முரண்பாடுகள் விவாதிக்கப்பட வேண்டும் என்றாலும், தரம் தாழ்ந்த வன்மம் மற்றும் மலிவான ஆபாச அரசியல் ஒட்டுமொத்தத் தமிழ் அறிவுச் சூழலையும் சிதைப்பதாக இக்கட்டுரை பகுப்பாய்வு செய்கிறது...."
நக்கீரன் மரபும் நவீன வக்கிரமும்
சங்க இலக்கியக் காலந்தொட்டுத் தமிழ் அரசியல் மற்றும் இலக்கியக் களம் என்பது அறிவுப்பூர்வமான விவாதங்களாலும், தர்க்கரீதியான தத்துவ மோதல்கல்களாலும் செழுமைப்பட்டு வந்த ஒரு உன்னத மரபைக் கொண்டது. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றம்மே" என்று இறைவனுக்கே எதிராய் நின்று வாதாடிய நக்கீரனின் மரபு, எப்போதுமே வாதத்தின் பொருளையும் நீதியையும் மட்டுமே முதன்மையாகக் கொண்டிருந்ததே தவிர, தனிமனிதர்களைக் கொச்சைப்படுத்துவதாக இருந்ததில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய டிஜிட்டல் யுகத்திலும், சமூக ஊடகப் பரப்பிலும் தங்களை 'நவீன நக்கீரர்கள்' என்று நினைத்துக் கொள்ளும் ஒருசிலர், விவாதங்களின் மாண்பை முற்றிலும் சிதைத்து, அதை ஒரு ஆபாசப் புதைகுழியாக மாற்றி வருகின்றனர்.
சமீபகாலமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களைக் குறிவைத்து, ஈழத்தமிழர்களில் ஒருசில பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விமர்சனங்கள், அதன் அரசியல் எல்லைகளைக் கடந்து, அருவருக்கத்தக்க தனிமனிதத் தாக்குதல்களாகவும், அடாவடித்தனங்களாகவும் உருவெடுத்துள்ளன.
சீமானை ஒருகாலத்தில் தீவிரமாக ஆதரித்த மற்றும் இன்று எதிர்க்கும் இருதரப்புத் தமிழர்களும் பொதுவெளியில் பேசக்கூடாத, கேட்கக்கூடாத வார்த்தைகளால் முட்டி மோதிக்கொள்ளும் இந்த அவலம் எல்லைமீறிய அநாகரிகத்தின் உச்சமாகும்.
விமர்சனமும் அதன் எல்லைகளும்
ஜனநாயகக் கட்டமைப்பில் ஒரு அரசியல் தலைவரோ அல்லது இயக்கமோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; அந்த வகையில் இந்த எழுத்தாளனாகிய நானும் கூட சீமான் அவர்களின் 'தமிழ் தேசியக் கோட்பாடுகள்', அவரது 'பெரியாரிய எதிர்ப்பு நிலைப்பாடு' மற்றும் அவரது தேர்தல் உத்திகள் குறித்துத் தொடர்ந்து மிகக் கடுமையான சித்தாந்த விமர்சனங்களை முன்வைத்து எழுதியும் பேசியும் வந்துள்ளேன். ஆனால், அந்த விவாதங்கள் யாவும் தமிழ்நாடு அரசியல்-ஈழத்தமிழர் அரசியல் என்ற எல்லைக் கோடுகளுக்குட்பட்ட நாகரிகமான எல்லையை விட்டு ஒருபோதும் விலகியதில்லை.
கொள்கை முரண்பாடுகளைக் கொள்கையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விதியை மறந்து, இன்று சமூக வலைத்தளங்களில் நடப்பதோ முற்றிலும் வேறொரு வக்கிர அரசியல் வடிவமாக உள்ளது.
சித்தாந்த ரீதியாக விவாதிக்கத் துப்பில்லாத அநாமதேயக் கும்பல்கள், பழைய காணொளிகளை வெட்டி ஒட்டி, போலித் தரவுகளை உருவாக்கி, தனிப்பட்ட வாழ்க்கையை ஆபாச வார்த்தைகளால் அசிங்கப்படுத்திப் பதிவிடுகின்றனர். இதற்குப் பெயரோ அல்லது செயல்பாடோ 'அரசியல் விமர்சனம்' அல்ல; இது வெறும் தனிநபர் வன்மம் மற்றும் மனப்பிறழ்வின் வெளிப்பாடு என்பதை நாம் உரக்கச் சொல்லியாக வேண்டும்.
சர்வதேச அரங்கில் சிதையும் பிம்பம்
ஈழத்தமிழினம் உலக வரலாற்றில் தனது சுயமரியாதைக்காகவும், நீதிக்கான உரிமைக்காகவும் மாபெரும் தியாகங்களைச் செய்த ஒரு உன்னதமான தேசிய இனம் என்பது உலகறிந்த உண்மை.
சர்வதேச சமூகத்தின் முன்னால் எமது இனம் எப்போதுமே தனது கட்டுக்கோப்பான ஒழுக்கத்திற்கும், அறிவார்ந்த சிந்தனை முதிர்ச்சிக்கும் பெயர் பெற்றது. ஆனால், இன்று சீமானுக்கு எதிரான வன்மத்தைக் கக்குவதாக நினைத்துக்கொண்டு, ஒருசில முகமூடி மனிதர்கள் செய்யும் மலிவான அரசியல் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் சமூகத்தின் மீதான உன்னதமான பிம்பத்தையும் சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்துவதாகவே முடிகிறது.
தமிழ்நாட்டு அரசியலின் தளம் வேறு, புகலிட மற்றும் ஈழத்து அரசியலின் அன்றாடத் தேவை வேறு என்ற எதார்த்தப் புரிதல் இல்லாமல், தமிழ்நாட்டுத் தலைவர்கள் மீது ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினர் தொடுக்கும் இந்த எல்லைமீறிய தனிநபர் அடாவடித்தனங்கள், தமிழக மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் இடையே இருக்கும் தொப்புள்கொடி உறவில் தேவையற்ற விரிசல்களையும் கசப்புகளையும் மட்டுமே உருவாக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது.
எதிர்வினையின் அளவுகோலும் தேவை
மறுபுறம், இந்த மலிவான அவதூறுகளுக்கு எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில், நாம் தமிழர் கட்சியின் தீவிரத் தொண்டர்களும் தம்பிகளும் பொதுவெளியில் தரம் தாழ்ந்த ஆபாச வார்த்தைகளைப் பிரயோகிப்பது அவர்களின் தலைவனுக்கோ அல்லது அவர்கள் பேசும் 'தூய தமிழ் தேசிய' அரசியலுக்கோ எவ்வகையிலும் பெருமை சேர்க்காது.
ஒரு அநாகரிகமான தாக்குதலுக்கு அதைவிட மோசமான அநாகரிகத்தால் பதிலளிப்பது விவாதத்தை இன்னும் கீழ்த்தரமாக்குமே தவிர, நியாயத்தை நிலைநாட்டாது என்பதை அவர்கள் உணர வேண்டும். தங்களின் கொள்கை மீது உண்மையிலேயே பற்றுக்கொண்ட தம்பிகள், இத்தகைய அநாமதேயக் கும்பல்களின் சதிவலைக்குள் சிக்காமல், தங்களின் எதிர்வினைகளை அறிவுப்பூர்வமாகவும், தார்மீகப் பண்புகளுடனும் மட்டுமே முன்வைக்கப் பழக வேண்டும்.
"......தமிழழீத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் எப்போதுமே களத்தில் உள்ள போராளிகளிடமும், பொதுமக்களிடமும் மிக உயர்ந்த ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், பேச்சில் கண்ணியத்தையும் எதிர்பார்த்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எத்தகைய கடுமையான எதிரிகளையும் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசியல் ரீதியாக எதிர்கொண்ட மரபு எமது விடுதலைப் போராட்ட வரலாறு. இன்று தலைவரின் படத்தையும், தியாக வரலாற்றையும் தங்களின் சுயவிளம்பரங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த 'நவீன நக்கீரர்கள்', தலைவரின் அந்த உன்னதமான ஒழுக்க நெறிமுறைகளை முற்றிலும் மறந்துவிட்டு ஆபாசச் சாக்கடையில் புரளுவது எமது வரலாற்றுத் தியாகங்களை இழிவுபடுத்துவதற்குச் சமமாகும்...."
'அகரம்' இதழின் வேண்டுகோள்
அரசியல் தலைவர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால் ஒரு சமூகத்தின் கூட்டுப் பண்பாடும், விவாத வெளியின் மாண்பும் சிதைந்துவிட்டால், அதை மீண்டும் மீட்டெடுப்பது மிகக் கடினம். எனவே, 'அகரம்' இதழின் வாயிலாக உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு நாம் விடுக்கும் முதன்மையான வேண்டுகோள் இதுதான்: மலிவான தனிநபர் தாக்குதல்களையும், ஆபாச அவதூறுப் பதிவுகளையும் இருதரப்பிலும் உள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். முகமூடி அணிந்து வரும் அநாமதேய வன்மங்களுக்கு எதிர்வினையாற்றி எமது நேரத்தையும், மொழியையும் அசிங்கப்படுத்தக் கூடாது. சீமான் உள்ளிட்ட எந்தவொரு தலைவரின் மீதான விமர்சனமாக இருந்தாலும், அதைத் தத்துவார்த்த தளத்திலும், ஆரோக்கியமான கொள்கை விவாதங்களாகவும் மட்டுமே கொண்டு செல்வோம்; தமிழ் ஆன்மாவின் சுயமரியாதையையும், கண்ணியத்தையும் காப்போம்!
0 Comments