இசை ஏன் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது? – தமிழ் இளைஞர்களின் கலாச்சார அடையாளத்தை ஒடுக்கப் பாயும் PTA!

மனித உரிமை | கலை ஒடுக்குமுறை

இசை ஏன் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது?

ஈழத் தமிழ் இளைஞரின் இசைக்கு 'பயங்கரவாதம்' பட்டம் — PTA மூலம் தமிழ் கலாச்சாரத்தை ஒடுக்கும் இலங்கை அரசின் புதிய அத்தியாயம்

✍ கிருஸ்ணா அம்பலவாணர் | 📅 ஜூன் 2026

கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது தமிழ் ராப்பர் ஹிப்ஹாப் சொல்லிசை கலைஞரான சங்கீதன் (சங்கீதன் கணேசகுமார்) இலங்கை அரசின் Prevention of Terrorism Act (PTA) 1978-ன் பிரிவு 03(g) கீழ் கைது செய்யப்பட்டு 17 ஜூன் வரை விளக்கமறியலில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரது "குற்றம்"? சாவகச்சேரி நாவற்குளியில் நடந்த கோயில் திருவிழா இசை நிகழ்ச்சியில் பக்திப்பாடல்களும் தமிழ் சினிமா பாடல்களும் பாடிய பிறகு, அதை எடிட்டிங் செய்து தனது டிக் டாக் கணக்கில் பதிவேற்றியது.

காவற்துறைதரப்பில் சொல்லப்படுவது: அந்தப் பாடல்கள் "தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாகவும் புகழ்வதாகவும்" அவர்களை மீளுருவாக்கும் முயற்சியை மேற்கொள்வதற்கான அறிகுறிகளாகத் தோன்றுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை என்ன? இது ஒரு கோயில் திருவிழா. அங்கு பாடப்பட்டவை பக்தி மற்றும் பொழுதுபோக்குப் பாடல்கள். பின்னர் அவர் தனது சொந்த ராப் பாடலைச் சேர்த்து எடிட்டிங் செய்தார். இதை "பயங்கரவாதம்" என்று முத்திரை குத்துவது — தமிழ் இளைஞர்களின் கலை வெளிப்பாட்டை முழுமையாக ஒடுக்கும் முயற்சியின் தொடர்ச்சியே ஆகும்.

இந்தச் செய்தி தனித்து நிகழவில்லை. கடந்த வாரம் மட்டும் உரும்பிராயில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடியதற்காக S.G. சாந்தன் மகன் கோகுலன் உள்ளிட்ட இருவர் போலீசாரால் விசாரிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் முழுவதும் கோயில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், முரசு இசை — இவை அனைத்தும் இப்போது "ஈழத் தேசியப் பாடல்கள்" என்ற பெயரில் கண்காணிக்கப்படுகின்றன. அத்தோடு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக்கருத்துக்கள் திட்டமிட்டு சிங்கள சமூக ஊடகங்களில் இனவெறி தாக்குதல்கள், அவதூறுகள் என வேண்டுமென்றே — இவை எல்லாம் திட்டமிட்டு நடைபெறுகின்றன.

ஈழத் தமிழர்களுக்கு இசை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது நமது வரலாறு, வலி, இழப்பு, எதிர்ப்பு, நினைவு — இவற்றைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் ஆயுதம்.

தமிழர் தாயகத்தில் நீறுபூத்த நெருப்பாய் மூண்டுகொண்டிருக்கும் விடுதலைக்கணல் குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் என — போருக்குப் பிந்தைய தமிழ் சமூகத்தில் இசை மூலம் மக்கள் தங்கள் அடையாளத்தை, இழந்த மண்ணின் நினைவை வெளிப்படுத்துகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி ஒவ்வொரு பாடலையும் தடை செய்வது என்பது, 2009-க்குப் பிறகும் தமிழ் தேசிய உணர்வை அழிக்கும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதி.

PTA சட்டம் 1978 முதல் தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதை "தன்னிச்சையான கைது, சித்திரவதை, அரசியல் அடக்குமுறைக்கான கருவி" என்று விமர்சிக்கின்றன. 17 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி இளம் கலைஞர்களை கைது செய்வது — இலங்கை அரசு இன்னும் "வெற்றி" பெறவில்லை என்பதையே காட்டுகிறது.

✦   ✦   ✦

இதை எதிர்த்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே எமக்கான கேள்வியாகும்? ஈழத் தமிழ் இளைஞர்களின் இசை, கலை, கவிதை — இவை அனைத்தும் நமது தேசிய அடையாளத்தின் உயிர். இதை ஒடுக்க அனுமதிக்கக் கூடாது. உலகத் தமிழர்கள், மனித உரிமை அமைப்புகள், ஐ.நா. — அனைவரும் இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். #FreeHiphopSangee என்ற கோரிக்கையை உலகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.

ஒரு ராப்பரை ஒரு சொல்லிசை கலைஞரை கைது செய்வதால் தமிழ் உணர்வை அடக்க முடியாது. மாறாக, அது நமது போராட்டத்தை இன்னும் வலுப்படுத்தும்.

"போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியங்கள் மாறாது" — எமது தேசியதலைவரின் உயர்ந்த வாசகம் இன்று எமக்கான குறியீடாக எழுந்து நிற்கின்றது.

#FreeHiphopSangee   #EndPTA   #TamilCulturalResistance
கி
கிருஸ்ணா அம்பலவாணர்
ஈழத் தமிழன் | திராவிட தமிழ்த்தேசிய சிந்தனையாளன்
🎵 PTA எதிர்ப்பு · தமிழ் கலை உரிமை · #FreeHiphopSangee · இசை ஒடுக்கப்படாது

Post a Comment

0 Comments