சோஷியல் மீடியா எனும் 'நுனிப்புல் மேயும் நோயாளிகளின் சந்தை': நான்கு வரிப் பதிவுகள் சமூகத்தை மாற்றிவிடுமா?

சமூக விமர்சனம் | ஊடகவியல்

சமூக ஊடகப்பரப்பு: நுனிப்புல் மேயும் நோயாளிகளின் சந்தை

ஆழமான வாசிப்பு இழந்த தலைமுறையும், எக்கோ சேம்பர் கலாச்சாரமும்

✍ கிருஸ்ணா அம்பலவாணர் | 📅 ஜூன் 2026

இன்று சமூக வலைதளங்கள் முழுக்க "நுனிப்புல் மேயும் நோயாளிகள்" நிறைந்துவிட்டன. எதையும் முழுமையாக அறிந்துகொள்ள யாருக்கும் விருப்பமில்லை. தங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததையோ, தாங்கள் நம்புவதையோ உறுதிப்படுத்தும் நான்கு வரி பதிவுகளை மட்டுமே தேடுகின்றனர். இந்த ஆட்டு மந்தைக்கு, ஆழமான பகுப்பாய்வு தேவையில்லை. தங்கள் மனநிலையை உறுதிப்படுத்தும் ஒரு சிறு பதிவே போதும்.

சமூக ஊடகங்களில் மேலோட்டமாக உலாவுதல்
நான்கு வரி பதிவுகளில் மூழ்கிய தலைமுறை — ஆழமான வாசிப்பு எங்கே?

இவர்கள் சமூக வலைதளங்களில் உரையாடும்போது, "எல்லாம் மேலோட்டமாக இருக்கிறது", "ஆழமான எழுத்துக்கள் இல்லை" என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவர்களே உண்மையில் என்ன செய்கின்றனர்? அவர்களும் கூடிக்கதை சொல்லும், செவிவழிச் செய்திகளைப் பரப்பும், நேரத்தைக்கொல்லும் உரையாடல்களிலேயே மூழ்கியிருக்கின்றனர். இந்த உரையாடல்கள் சமூகத்தை மாற்றாது என்பதை அவர்கள் அறிவதில்லை.

சமூக மாற்றம் என்பது காபி ஷாப் உரையாடல்களாலோ, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களாலோ, நான்கு வரி "எழுச்சி" பதிவுகளாலோ நிகழ்ந்ததில்லை. வரலாறு முழுவதும், சமூகங்களை மாற்றியது ஆழமான, துணிவான, ஆதாரபூர்வமான எழுத்துக்களே. பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தமிழக எழுதுலக் சிற்பிகளும், அதுபோல் ஈழத்தின் தலைசிறந்த எழுதுலகப்பிதாமகர்கள் பேராளர்கள் போன்றோரின் எழுத்துக்கள் நான்கு வரிகளில் இல்லை. அவை நீண்ட, வலிமையான, சிந்தனையைத் தூண்டும் எழுத்துக்களாக இருந்தன.

இன்று பலர் "நான் படிக்க மாட்டேன்", "நீண்ட கட்டுரை வேண்டாம்", "சுருக்கமாகச் சொல்லு" என்று கேட்கின்றனர். இது வெறும் சோம்பல் அல்ல. இது சிந்தனை முடக்கம்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முழுமையாக அறிந்துகொள்ளும் விருப்பமே இல்லாத ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் "எக்கோ சேம்பர்" (Echo Chamber) ஒன்றை மட்டுமே தேடுகின்றனர். அதற்கு மாறாக ஏதாவது எழுதினால், "நீ எழுதுவது மிக அதிகம்", "யார் படிப்பார்கள்?" என்று கேள்வி கேட்கின்றனர்.

உண்மையில், சமூக வலைதளங்களில் இன்று நடக்கும் பெரும்பாலான உரையாடல்கள் பொழுதுபோக்கு மட்டுமே. அவை சமூகத்தை மாற்றாது. அவை சமூகத்தின் வலியை ஆவணப்படுத்தாது. அவை அநீதியை அம்பலப்படுத்தாது. அவை வெறும் செவிவழிச் செய்திகளின் நவீன வடிவம் மட்டுமே.

✦   ✦   ✦

ஒரு சமூகத்தை உண்மையாக மாற்ற வேண்டுமானால், அதன் மக்கள் முழுமையாகச் சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். நான்கு வரி பதிவுகளால் ஒரு தேசத்தின் வரலாறு, அரசியல், பொருளாதாரம், சமூக அநீதி ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு ஆழமான வாசிப்பும், துணிவான எழுத்தும் தேவை.

இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து, சிந்தனை முடக்கம் அல்ல. அது சிந்தனை முடக்கத்தை விரும்பும் மனநிலை. "நீண்ட எழுத்து வேண்டாம்", "சுருக்கமாகச் சொல்லு", "எங்களுக்கு உறுதிப்படுத்தும் பதிவுகள் மட்டும் போதும்" என்று கேட்கும் மனநிலைதான் உண்மையான ஆபத்து.

எழுத்தாளன் ஒரு பொழுதுபோக்காளன் அல்ல. அவன் ஒரு சமூக மனசாட்சி. அவனது கடமை, மக்களை ஆறுதல்படுத்துவது அல்ல — அவர்களை எழுப்புவது. அதற்கு நான்கு வரி பதிவுகள் போதாது. அதற்கு ஆழமான, துணிவான, பொறுப்பான எழுத்து தேவை.

சமூகம் மாற வேண்டுமானால், முதலில் மக்கள் முழுமையாகப் படிக்கவும், முழுமையாகச் சிந்திக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சோஷியல் மீடியா என்ற இந்த "நுனிப்புல் மேயும்" சந்தை, இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கி
கிருஸ்ணா அம்பலவாணர்
ஈழத் தமிழன் | திராவிடத் தமிழ்த்தேசிய சிந்தனையாளன்
📖 ஆழமான வாசிப்பு · துணிவான எழுத்து · சிந்தனை முடக்கத்திற்கு எதிராக

Post a Comment

0 Comments