அஞ்சலி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அவர்கள் மறைவு
என் அன்பு நண்பர், தோழர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி இன்று எம்மை விட்டுப் பிரிந்தார் என்பதை அறிந்து மிகப் பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளேன்.
மட்டக்களப்புத் தளபதி கருணாவின் பிரிவின்போது சற்று முறைதவறி நடந்திருந்தாலும், பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதான தன் உண்மையான அர்ப்பணிப்பால், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து தன் நிலைப்பாட்டை விளக்கி, மீண்டும் தீவிரமான தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் களப்பணியில் ஈடுபட்டவர் ஜெயானந்தமூர்த்தி.
நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, இனப் பிரச்சினைத் தீர்வு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தீவிரமாகக் குரல் கொடுத்தார். தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார உரிமைகளை நாடாளுமன்றத்தில் துணிவுடன் முன்வைத்தவர்.
2009க்குப் பிறகு வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச அரங்குகளில் தொடர்ந்து எடுத்துச் சென்றார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஆகியவற்றை துணிவுடன் முன்வைத்தவர்.
தமிழீழ விடுதலை மீதான அவரது அக்கறை ஒருபோதும் குறையவில்லை — முட்டல்களும் மோதல்களும் நிறைந்த பயணத்தில் கூட.
மக்கள் அவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்த பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். சிவராம், நடேசன், துரைரத்தினம், பிரகாஸ், தவராசா, நிராஸ், டேவிட், நிக்டன், வேதநாயகம், தேவராஜ், கனகரவி, வித்தியாதரன், அரியம் உள்ளிட்ட எமது ஊடகக் குழுமத்தின் பல தோழர்களுடன் முட்டல்களும் மோதல்களும் நிறைந்த பயணத்தில் கூட, தமிழீழ விடுதலை மீதான அவரது அக்கறை ஒருபோதும் குறையவில்லை.
பல ஆண்டுகள் அவருடன் இணைந்து களப்பணிகளையும், வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டவன் நான். 2009 க்குப் பிறகு அவரது அரசியல் நிலைப்பாடுகளில் சில இடைவெளிகள் ஏற்பட்டபோதிலும், எமக்கான உறவு உண்மையோடும் நேர்மையோடும் தொடர்ந்தது.
தாயகம் திரும்பிய நாட்களில் பின் அவரது சரணாகதி அரசியல் நிலைபாடுகள் சார்ந்து எமக்குள் மனக்கசப்புக்கள் உருவாகவே செய்தன. ஆனாலும் அவர் அந்த சூழலுக்கு ஏற்ப அவர் எடுத்த முடிவு என்றே நாம் கடந்து சென்றாலும் அவரது இறுதிக்காலத்தில் நட்பின் காரணமாய் அவருக்கான உச்சதுணையாகவே இருந்தோம்.
இன்று அவர் இல்லை என்பது எனக்கு மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு கட்டங்களில் பங்கேற்ற பல தோழர்களுக்கும் பெரும் இழப்பாகும்.
நண்பர் ஜெயானந்தமூர்த்தி, நீங்கள் பயணித்த பாதை, சுழல்களும் திருப்பங்களும் நிறைந்தது. ஆனால் தமிழீழ விடுதலை மீதான உங்கள் அக்கறை ஒருபோதும் மறையவில்லை.
ஓர் அவ்புக்குரியவனாய் உற்ற நட்பணாய், எம்மோடு பயணித்த உங்கள் மறைவு எனக்கு மிகப் பெரிய வலியைத் தருகிறது.
உங்களுடன் பகிர்ந்துகொண்ட நினைவுகள், உரையாடல்கள், களப்பணிகள், எல்லாம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
சென்று வாருங்கள் ஜெயா..
உங்கள் பயணம் முடிவடைந்தாலும், நீங்கள் விதைத்த விதைகள் தமிழீழ மண்ணில் இன்னும் முளைக்கும்.
என் ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்.
0 Comments