நெல்லை நடேசனின் நினைவோடு ஒரு நெடிய பயணம்... மானுட விடுதலைக்கான பாதையில் ஊடகங்கள் இன்று எங்கே நிற்கின்றன?

ஊடகவியல் ஆய்வு

மானுட விடுதலைக்கான பாதையில் ஊடகங்கள்

ஊடகம் — தோற்றம் · செல்நெறி · செயல் நெறி

✍ கிருஸ்ணா அம்பலவாணர்

"நெல்லை நடேசன்" என எல்லோராலும் அறியப்பட்ட சிறந்த பண்பாளன் ஐயாத்துரை நடேசன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை ஏற்பட்ட துன்பியல் சம்பவத்தில் அகாலமரணமடைந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் அகாலமரணமடைந்த போது அகவை 50. இவரது இழப்புச்செய்தி கேட்டு, அத்தனை முகப்புத்தக சுவர்களும் காட்டி நின்றன! இந்திய, புலம்பெயர் இணையத்தளங்கள், பத்திரிகைகள் பேசின!

யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜ. நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர். இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.

20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், 'நெல்லை நடேசன்' என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.

இனி, அவரது உடல் இந்தப் பூமியிலும் இல்லை; பூமிக்குள்ளும் (உடல் புதைக்கப்படவில்லை) இல்லை. ஆனால், மறுக்க முடியாத, மறக்க முடியாத ஒரு சக்தியாகத் துருத்திக்கொண்டு, எப்போதும் இலங்கையின் ஊடக வரலாற்றில் நிலைத்திருப்பார் என்பதுதான் உண்மை.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களுடன் IBC தமிழில் பணியாற்றிய காலத்தில் (தொலைபேசி ஊடாக) இணைந்து பணியாற்றியதால் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்கும், ஊடக அறிவிற்கும் அவரது இந்த ஆவணப்பதிவினூடே நன்றி தெரிவிக்கும் அத்தகைய ஓர் உன்னத எழுத்தாளனின் நினைவாக வெளிவரும் ஆவண பதிப்பில் எனது இவ் ஆய்வினை அவருக்கு சமர்பணம் செய்வதில் பெருமிதம் கொள்கின்றேன்.

— இவ்வண்ணம், அகதித்தமிழன்

முன்னுரை

'18 ஆம் நூற்றாண்டில் கடற்படை யார் கைகளில் இருந்ததோ அவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள்தான் உலகை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன. ஆனால் 20-ஆம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தனக்கு கட்டுபட்டதாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும்' என்கிறார் முன்னாள் மலேசியா பிரதமர் மகாதீர் அவர்கள்.

இந்த ஆய்வுக் கட்டுரையில் ஊடகங்கள் பற்றியும் அதன் வகைகள், பணிகள் பற்றியும், ஊடகம் இந்த சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றியும், ஊடகங்களால் அறநெறி, மனித மாண்பு பாதிப்புகள் பற்றியும் விவரித்துள்ளேன்.

அலகு 1 — ஊடகம் ஓர் அறிமுகம்

ஊடகம் என்றால் கடத்துவது என்று பொருள்படும். ஒரு செப்பு கம்பியின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு மின்சாரத்தைக் கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாக செயல்படுகிறது. ஒரு கருத்தை அல்லது தகவலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பரிமாற்றம் செய்ய உதவும் கருவிதான் ஊடகம் எனப்படும். நாம் ஒருவரிடம் பேசும் போது நமது வார்தையானது ஒலி வடிவில் காற்றில் பயணம் செய்து மற்றவரைச் சென்றடைகிறது. இதில் ஒலி என்பது தகவலின் வடிவம். காற்று ஓர் ஊடகமாகச் செயல்படுகிறது. அதே போல் நாம் பேசுவதை மற்றவர் புரிந்துகொள்ளும் போது மொழி ஒரு ஊடகமாகச் செயல்படுகிறது.

ஊடகவியல் என்பது மனிதர்களுக்கிடையில் கருத்துக்களை, தகவல்களைக் கொண்டு சென்று பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற துறையைக் குறிக்கிறது. குறிப்பாகச் சொன்னால் கருத்தியலை கட்டமைப்பதும், சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பதும், அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் விளங்குகிறது.

அலகு 2 — ஊடகத்தின் வகைகள்

ஊடகம் அதன் தன்மைக்கேற்ப நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: அச்சு ஊடகம், அலை ஊடகம், காட்சி ஊடகம், மின்னனு ஊடகம்.

2.1 அச்சு ஊடகம்

மனிதன் தனது கருத்துக்களையும், உணர்வுகளையும் பிறரிடம் பரிமாறிக்கொள்ள எழுத்து ஊடகம் பயனுள்ளதாக இருந்தது. அக்காலம் முதல் இக்காலம்வரை எழுத்து ஊடகம் தகவல்கள் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கி.மு.106-ல், சிசரோ மன்னன், பிறப்பு, இறப்பு விவரங்களை எழுதி அரண்மனை முன் மக்கள் பார்வையில் வைத்தான். பெரும்பாலான விவிலிய கையேடுகள் 'பாப்பிரைசு' என்ற நாணலிலும், விலங்குத்தோல் மற்றும் சுருள்களிலும் எழுதிவைக்கப்பட்டன.

அச்சு இயந்திரம் கி.பி.1477-ல் ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ஜோ ஹானெஸ் கூடன்பர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் திராட்சைச்சாறு பிழியப் பயன்படும் கழிவியிலிருந்து மர அச்சுப் பொறியைக் கண்டறிந்தார். கி.பி.1811-ல் பிடரிக் நீராவி இயந்திரத்தால் இயங்கும் அச்சு இயந்திரத்தை உருவாக்கினார். உலகின் முதல் பத்திரிக்கை அன்றைய ஜெர்மனியிலும், இன்று பிரான்சு நாட்டிலுமுள்ள ஸ்டராபர்க் நகரிலிருந்து 'உறவு' என்ற பெயரில் வெளிவந்தது. இந்தியாவில் அசோக மன்னரின் கல்வெட்டுகளே முதல் ஊடகம் என்றாலும் கி.பி.1780-ல் இந்திய இதழியலின் தந்தை என்றழைக்கப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் 'வங்காள கெஜட்' என்கிற பெயரில் தொடங்கினார். 1931-ல் 'தமிழ் மாகசின்' என்பதுதான் தமிழில் தோன்றிய முதல் இதழ் என்று கூறுவார்கள். ஆனால் சீசன் பால்கு ஜயர் என்னும் ஜெர்மானிய நாட்டுத்துறவி கி.பி. 1706ல் தரகம்பாடிக்கு வந்து, தமிழ்கற்று மறைக்கல்வி நூல்களை வெளியிட்டார்.

இன்று இந்தியாவில் அச்சு ஊடகம் நாளுக்கு நாள் மிகுந்த வளர்ச்சி அடைந்து வருகின்றது. ஆனால் மக்களுக்கு நல்ல நேர்மையான, உண்மையான நடுநிலை செய்திகளைத் தரும் பத்திரிகைகள் மிகவும் குறைவு. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அச்சு ஊடகம் இன்று அரசியல்வாதிகளிடமும், மேல்தட்டு மக்களிடமும் சிக்கி தனது தனித்துவத்தை இழந்துவருகிறது.

2.2 அலை ஊடகம்

அச்சு ஊடக வளர்ச்சியின் அடுத்தப்படி அலை ஊடகம். இது தகவல் சென்றடைவதை துரிதப்படுத்தியது. அலைபேசி, வானொலி போன்றவை அலை ஊடகத்திற்கு எடுத்துகாட்டாகும். தகவல்களை பரிமாரிக்கொள்ளப் புறாவையும், விலங்குகளையும் தூதனுப்பிய மனிதன் இன்று காற்றிலும் தூதனுப்புகிறான். கி.பி. 1894-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சார்ந்த மார்க்கோனி கம்பியில்லாத் தந்தி முறையைக் கண்டறிந்தார். இதன்படி ஒலியை மின்காந்த அலைகள் வழி அனுப்ப இயலும் என்பதைக் கண்டறிந்தார். இதுவே பிற்காலத்தில் 'வானொலி' கப்பலில் பயணம் செய்யும் மாலுமிகள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் பம்பாய் மகாணத்தின் ஆளுநராய் இருந்த ஜார்ஜ் அவர்களின் முயற்சியில் 1921-ல் டைம்ஸ் ஆப் இந்தியா அஞ்சல்-தந்தித் துறையுடன் இணைந்து சிறப்பு வானொலி நிலையம் ஒலிப்பரப்ப ஏற்பாடு செய்தது. இதன் தொடர்ச்சியாய் கி.பி. 1923 ஜுன் மாதம் அகில இந்திய வானொலி நிலையம் தனது ஒலிபரப்பைத் தொடங்கியது. 1977 ஆம் ஆண்டு பண்பலை ஆரம்பிக்கப்பட்டு அரசும் தனியார் நிறுவனமும் பட்டிதொட்டிகளிலும், படகிலும் பயணமாகும் மீனர்களுக்கும் ஏழை சாமானிய மக்களுக்கும் தொடர்ந்து வானொலி மூலம் உதவி வருகிறது. அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922) தொலைபேசி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களையும் மனங்களையும் இணைத்தார். மார்ட்டின் கூப்பர் என்ற அமெரிக்கர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முதல் கைபேசியை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

2.3 காட்சி ஊடகம்

காட்சி என்பது ஒலி மற்றும் ஒளி சார்ந்த கலவை. ஒரு காட்சி வெறும் காட்சிகளை மட்டும் காட்டி மறைந்துவிடுவது இல்லை. பார்வையாளர்கள் மத்தியில் கருத்துகளை விதைகளாகத் தூவுகிறது. காட்சி ஊடகம் இரண்டு வகைப்படும்: தொலைக்காட்சி மற்றும் சினிமா.

1925-ல் ஜான் லூகி போர்டு என்ற ஆங்கிலேயர் தொலைக்காட்சிக் கருவியை கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் ஒரு வினாடிக்கு 12 வட்ட வடிவில் இருந்த தொடர்படங்கள் மூலம் அசையும் படக்காட்சியை உருவாக்கினார். கி.பி 1920-30-களில் அமெரிக்காவில் பிறப்பெடுத்த தொலைகாட்சி, கி.பி. 1970-ல் இந்தியாவிற்குள் நுழைந்தது. தொலைக்காட்சிபெட்டியை 1980-களில் அப்போதைய பிரதமர் திரு. இராஜிவ்காந்தி அவர்கள் கிராமங்களுக்கு அறிமுகப்படுத்தினார். செயற்கைக் கோள்வழி ஒளிபரப்பு 1962-ல் தகவல் தொடர்புக்கான முதல் கோளான 'ஆரம்ப பரவை' மூலம் தொடங்கப்பட்டது. பின்பு கி.பி 1965 மற்றும் 1971-இல் ஏவப்பட்ட 'இன்டெல்செட்', 'இன்டெர்புனிக்' என்ற இரு கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. அதன் பயனாகத்தான் இன்று சுமார் 150 நாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஒளி மற்றும் ஒலி பிம்பங்களைப் பரிமாறிக்கொள்கின்றன. இந்தியாவில் கி.பி 1976-ல் தூர்தசன் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் விளம்பரங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்துவிட்டு, பயனுள்ள தகவல்களை தருவதில்லை. இதற்கு முத்தாய்ப்பாக இன்று தனியார் தொலைகாட்சிகள் 'சன் டி.வி', 'ஸ்டார் டி.வி' எனப் புற்றீசல்போல் தொலைகாட்சிகள் வந்துவிட்டன.

கி.பி 1890-ல் தாமஸ் ஆல்வா எடிசனும், வில்லியம் பிரிசு கிரினும் சினிமா காமிரா உருபெற வித்திட்டார்கள். இவர்களைத் தொடர்ந்து கி.பி 1885-ல் பிரான்ஸ் நாட்டைச்சார்ந்த லூமியர் சகோதரர்கள் திரைப்படகருவியைக் கண்டறிந்தார்கள். இவர்கள் தயாரித்த 'தொடர்வண்டி நிலையத்திற்கு தொடர்வண்டி வருகை' என்ற படம்தான் உலகின் முதல் படம். இதனைத் தொடர்ந்து 1903-ல் வெளியான 'ஒரு பெரிய தொடர்வண்டி கொள்ளை' என்பதுதான் சற்று நீளமான திரைப்படம். 1919-ல் இராபர்ட் பிள ஹர்த்தி என்ற ஜெர்மனி நாட்டை சார்ந்தவர் செய்திக்குறும்படங்களைத் தயாரித்தார். இன்று ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சைபால் சட்டர்ஜி (டி.வி வேல்டு இதழின் ஆசிரியர்) 'ஒவ்வொரு வாரமும் 30 மொழிகளில் 110 மில்லியன் திரைபடங்கள் திரையிடப்படுகின்றன' எனக் கூறுகின்றார்.

இந்தியாவில் முதல்படம் 1896-ல் மும்பை வாட்கன் உணவுவிடுதியில் லூமியர் சகோதரர்கள் தயாரித்த ஆறு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட முதல் படம் 'ராஜா ஹரிச்சந்திரா'. இது தாதா சாகிப் பால்கே என்பவரால் தயாரிக்கப்பட்டது. தமிழில் முதல்படமாக 'காளிதாஸ்' என்ற பெயரில் 1931-ல் வெளிவந்தது.

திரைப்படம் உலகமக்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக அறிந்துகொள்ளவும், மனிதனை சர்வ தேசியமாக்கவும் உதவிசெய்கிறது. ஒரு பொது நலனிற்காக மக்கள் ஒரு குறிப்பிட்ட தேசியத்திற்குள், இனத்திற்குள் வாழ்கிறார்கள். திரைப்படமோ அவர்களை ஒருவருக்கொருவர் சமமாக தெரியும்படி செய்கிறது. அதன் மூலம் பல்வேறு தேசிய, இன வேறுபாடுகளை களையவும் செய்கிறது. இதன் அடிப்படையில் திரைப்படம் என்பது சர்வதேச அளவிலான, எல்லோருக்குமான ஒரு மனித தன்மையை உருவாக்குவதில் முன்னோடியாக இருக்கிறது.

2.4 மின்னனு ஊடகம்

இன்றைய நவீன உலகில் கணினியின் பங்கு அளப்பரியது. சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவர் முதன்முதலில் கணினியைக் கண்டுபிடித்தார். இவரே கணினியின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். கணினி இன்று அனைத்துத் துறைகளிலும் ஊடுருவியுள்ளது. முதலில் கணினிகள் கணக்கிட மட்டுமே பயன்படுத்தப்பட்டன, பின் ஏற்பட்ட வளர்ச்சியால் மருத்துவம், அறிவியல், புவியியல் போன்ற துறைகளிலும் தடம்பதித்தது. சர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ என்பவர் 1989 ம் ஆண்டு இணையத்தளத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் உலக மக்கள் அனைவரும் மனத்தாலும், உணர்வாலும் ஒன்றிணைக்கப்பட்டு சாதி, மத, மொழி, இனம் போன்ற குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு ஒரு பரந்த நோக்கில் ஒன்றிணைக்கப்பட்டனர். ரேமண்ட் சாமுவேல் டாம்லின்சன் என்பர் 1971 ஆம் ஆண்டு முதன் முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்தார். இன்றைய நவீன உலகத்தில் மின்னனு ஊடகம் மிகவும் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது.

அலகு 3 — ஊடகவியலின் பணிகள்

ஊடகத்தின் செயற்பாடுகளை தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்கின்ற மூன்று வரையறைகளுக்குள் அடக்கலாம்.

3.1 தகவல் தெரிவித்தல்

கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பணிதான் ஒரு ஊடகத்தின் முதல் பணியாகும். கருத்து என்பது இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஒலி ஒளி ஊடகங்களில் இவற்றுடன் கலந்துரையாடல், பாடல், நாடகம், சித்திரம், குறும்படம், ஆவணப்படம், திரைப்படம் என்று இந்த வடிவம் இன்னும் விரிவுபெறுகிறது. ஒரு விளம்பரமாக அறிவித்தல் மூலமாகவும் கூட ஒரு கருத்து மக்களிடம் எடுத்துச் சொல்லப்படலாம். ஒரு கருத்து ஊடகங்கள் வழியாக மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்ற போது முதலில் தகவல் தெரிவித்தல் என்ற பணி அங்கு நடைபெறுகிறது. உதாரணமாக: குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரங்கள்.

3.2 அறிக்கையிடுதல்

அறிக்கையிடுதல் என்பது ஊடகவியலில் மிக முக்கியமான ஒரு பணியாகும். ஒரு கருத்தை கட்டமைத்து, அதை மக்கள் நம்புகின்ற விதத்தில், அவர்கள் விருப்பத்தக்க வகையில் அவர்களுடைய அறிவுத் தளத்தை நோக்கிச் சென்றடைவதை ஊடகவியலில் அறிக்கையிடுதல் என்று சொல்கிறோம். அதாவது ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும், எதை உடுக்கவேண்டும், எதைக் குடிக்கவேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அனைத்துச் செயற்பாடுகளையும் அவனையறியாமலே அல்லது அவன் அறியும்படியாகவோ புறநிலையில் இருந்து இயக்குகின்ற சக்தியாக ஊடகவியல் விளங்குவதற்கு இந்த அறிக்கையிடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நமது நாட்டில் தயாரிக்கப்படுகின்ற ஒரு குளிர் பானம் தரமும் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருந்தாலும், சர்வதேச குளிர் பானங்களுடன் சந்தையில் போட்டிபோட முடிவதில்லை — இந்தப் பிரமை ஊடகங்களால்தான் கட்டமைக்கப்படுகிறது.

பொதுவாக அறிக்கையிடுதலில் தகவல் தெரிவித்தல், ஒப்பீடுதல், வெளிப்படுத்தல், நம்பிக்கையூட்டல் என்கின்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன. உதாரணமாக சர்வதேச சந்தையில் இடம் பிடித்திருக்கும் ஒரு பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பான ஒரு செருப்பு, முதன் முதலாக ஒரு நாட்டின் உள்சந்தைக்கு வருகின்றதென்று வைத்துக்கொண்டால் அந்தப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன்னர் அதைப்பற்றிய விளம்பரம் செய்யப்படும். இந்த விளம்பரத்தில் மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு விளையாட்டு வீரர் அந்த செருப்பை அணிவது போன்று காண்பிக்கப்படும். இதன் மூலம் இந்தத் தயாரிப்பு சிறந்ததாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை அல்லது பிரமை நுகர்வோருடைய மனங்களிலே கட்டமைக்கப்படும். அறிக்கையிடுதல் என்பது ஒரு விளம்பரத்தில் மட்டுமல்லாமல் ஊடகத்துறை சார்ந்த அனைத்து கருத்தியல் வெளிப்பாட்டு வடிவங்களில் இந்த அடிப்படையிலேதான் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக ஊடகத்துறையில் அறிக்கையிடுதல் என்பது இருவழித் தன்மை கொண்டதாகும். ஒன்று, ஒரு அதிகார மையத்திலிருந்து மக்களை நோக்கி அறிக்கையிடப்படுவது — இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களைத் தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெரும்பாலும் அனைத்து ஊடகங்களிலும் 90 வீதமான செயற்பாடுகள் இந்த வகையை, அதாவது மேலிருந்து கீழ்நோக்கிய கருத்தைக் கொண்டுசெல்லும் தன்மையைக் கொண்டவை. மற்றொன்று, மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதிகார மையத்தை நோக்கி அறிக்கையிடுவது — இது அநேகமாக ஒரு புலனாய்வு செயற்பாட்டுக்கு ஒப்பானது. இதற்குச் சிறந்த உதாரணமாகத் தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்களை குறிப்பிடலாம்.

3.3 பிரதிபலிப்பை உருவாக்குதல்

ஒரு கருத்து ஒரு ஊடகத்தின் வழியாக ஏதாவதொரு வடிவத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் போது அல்லது மக்கள் மத்தியிலே பரப்பப்படும்போது மக்களுடைய மனங்களிலே அறிதல், தெளிதல், வினையாற்றுதல் என்ற மூன்று செயற்பாடுகள் நடக்கின்றன. உதாரணமாக இலங்கையில் காச்சலுக்கென்று 'அ' என்ற மருந்து பிரபலமாக இருக்கிறதென்று வைத்துக் கொண்டால் இப்போது 'ஆ' என்ற சிறந்த மருந்து வெளிநாடுகளில் பிரபலமாகவும் அது இலங்கையில் விற்பனைக்கு வந்துள்ளதென்றும் ஒரு செய்தி ஊடகங்களில் வரும் போது அதை உபயோகிக்கும் ஒரு மனிதன் முதலில் இந்தப் புதிய மருந்து வந்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். அதற்கு அடுத்தபடியாக அந்த தகவல் வழியாக இந்த புதிய மருந்து வெளிநாடுகளில் பிரபலமாக இருப்பதால் சிறந்த மருந்தாக இருக்கும் என்ற கருத்து அவனுக்கு ஏற்படுகிறது. அதன் பின்னர் அந்த மருந்தை வாங்கவேண்டும் என்ற வினையாற்றும் எண்ணம் அவனுக்கு உருவாகிறது. மருத்துவர் பழைய மருந்தைக் கொடுத்தால் புதிய மருந்தை எழுதித் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு அவன் வருகிறான்.

அலகு 4 — ஊடக அறவியல்

4.1 ஊடகமும் சமூகமும்

ஊடகங்கள் மனித வாழ்வில் ஒரு மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. வளர்ந்த நாடுகள், வளரா நாடுகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என எல்லாரையும் பாகுபாடின்றி ஈர்த்து தன் வயப்படுத்தும் தன்மை கொண்டவை. கவனத்தை ஈர்த்தல், சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துதல், நடத்தையை மாற்றி அமைத்தல், வாழ்வின் அறநெறியையே புறக்கணித்தல், வன்முறையை வாழ்வாக ஏற்றல் என ஊடகத்தின் தாக்கம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல், ஊடகமும் சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஓர் ஆக்கப்பூர்வமான சக்தியாக செயல்படுகிறது.

உதாரணமாக 1981-ல் இருந்து 30 ஆண்டு காலமாகக் கொடுங்கோலாட்சி செய்து வந்த ஹாசினி முபாரக்கின் ஆட்சியை சமீபத்தில் புரட்சி செய்து புரட்டிப் போட்டிருக்கின்றது இணையதளம். பேஸ்புக் எனும் சமூகத் தொடர்பு வலைத்தளம் எகிப்தின் தலை எழுத்தையே மாற்றியிருக்கிறது. எகிப்தின் 8,00,000 இளைஞர்கள் இந்த சமூகத் தொடர்பு வலைத்தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். தங்களின் கருத்துக்களை, அதிருப்திகளைப் பதிவுச் செய்கின்றனர். முதலில் ஒத்த கருத்துடையவர்கள் சில ஆயிரம் பேர் இணைந்து வலைக்குழுக்களாகத் தங்களை இணைத்துக் கொண்டனர். காரசாரமான விவாதங்களும், புதிய புரட்சிகர கருத்து உருவாக்கங்களும் பரவலாக்கம் செய்யப்பட்டன. அரசு செய்யும் கொடுமைகளும், கொலைகளும் கட்டவிழ்த்துவிடுகின்ற வன்முறை காட்சிகளும் பரிமாறப்பட்டன. இவைகள் இளைஞர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வலைக்குழுக்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் தெருக்களில் இறங்கிப் போராடத் துணிந்தனர். இதனாலேயே எகிப்துப் புரட்சி தொடங்கியது. எகிப்துப் புரட்சியின் வெற்றியைப் பெற்று தந்த பேஸ்புக் வலைத்தளத்தை பாராட்டும் வகையில் ஜமால் இப்ராகிம் என்ற மனிதர் தன் மகளுக்கு பேஸ்புக் ஜமால் இப்ராகிம் என்று பெயர் சூட்டியுள்ளார். கியூபாவில் புரட்சி நடைபெற்ற போது, தலைநகர் ஹவானாவில் அதன் தலைவர் பிடல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏழு மணி நேரம் மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையாடல் கியூபாவில் புரட்சி ஏற்பட வழிவகுத்தது. இவ்வாறு ஊடகங்கள் மூலம் சமூக மாற்றங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

4.2 ஊடகமும் அரசியலும்

அரசியல் என்பது ஒரு சமூகக் கட்டமைப்பு சார்ந்த கூறுகளில் ஒன்று. அரசியலை அரசு+இயல் என்று பொருள் பிரித்துப் பார்க்கின்ற பொழுது ஒரு அரசியல் நடைபெறுகின்ற ஆட்சி முறைகளை விளக்குகின்ற ஒரு கல்வி. உதாரணமாக திரைப்படம்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சர்களையும், பல அரசியல் தலைவர்களையும் உருவாக்கியுள்ளது. நடிகனும் முதல்வனாக முடியும் என்பதை இந்திய அரசியலுக்கு அறிமுகம் செய்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். சினிமா மூலம் ஏழை மக்களின் உள்ளங்களில் இடம் பெற்று, தமிழ் நாட்டிலேயே மருத்துவமனையில் படுத்துக்கொண்டே வெற்றிப் பெற்று 1988-ம் ஆண்டு மூன்றாம் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் என்பதை தமிழக அரசியல் வரலாறு மறக்காது. நிர்வாகம், அரசியல், எழுத்து, பேச்சு, பத்திரிக்கை, இலக்கியம், நாடகம், திரைப்படம் போன்ற பல துறைகளில் முத்திரை பதித்த கலைஞர் முகருணாநிதி 1977-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வராக பதவி வகிக்கும் போதே இறந்து போன ஜெ.ஜெயலலிதா பல படங்களில் நடித்துள்ளார். 2021ன் அடுத்த முதல்வராகலாம் என கருதப்படும் மு.க ஸ்டாலின் கூட திரைத்துறையில் பயணித்தவர். இதே போல் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், குஸ்பு போன்ற திரைத்துறையினர் ஊடகத் துறையில் செல்வாக்குப்பெற்று பின் அரசியலில் ஈடுபட்டவர்கள். தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலையென்றால் மக்கள் நிழலையும், நிஜங்களையும் இணைத்துப்பார்த்ததின் விபரீதம்.

ஊடகத்தைக் கட்டுப்படுத்தும் சக்திகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: ஊடக நிறுவனத்தின் உள்ளிருந்து கட்டுப்படுத்துபவை, மற்றும் வெளியிலிருந்து கட்டுப்படுத்துபவை. உள்ளிருந்து கட்டுப்படுத்துவதில் முக்கியமானது உரிமையாளர்கள். ஊடக உரிமையாளர்கள் — இதழ்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் என எந்த ஊடகத்தை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் உரிமையாளரின் தன்மைக்கேற்ப வெளியாகும் செய்திகளின் உருவமும், உள்ளடக்கமும் மாறுபடுகின்றது. தமிழ் ஊடக உலகில் — இலங்கை, இந்தியா — பத்திரிகைகள் ஒரு குடும்பத் தொழிலாகவே உள்ளது. இதன் பாதகதன்மை என்பது தமக்கு சார்பானவர்களுக்கு ஆதரவாக செய்திகளை தந்து மக்களிடத்தில் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

வெளியிலிருந்து கட்டுப்படுத்துவதில் அரசும் சட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் கொடுக்கப்பட்டாலும் எல்லாவற்றையும் பேசவோ, எழுதவோ முடியாது. இலங்கையைப் பொருத்தவரையில் இலங்கை ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் ஏராளமான சட்டங்கள் உள்ளன. அரசாங்க ரகசியங்கள் சட்டம், அவதூறு சட்டம், திரைப்பட தணிக்கை குழு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. இவற்றுடன் விளம்பரங்களும் ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றன. ஊடகங்கள் செயல்பட பணம் இன்றியமையான ஒன்று. செய்தித்தாள்களில் பெரும்பாலும் விளம்பரங்களைத் தருவது அரசு என்பதால் பெரும்பாலான பத்திரிகைகள் அரசையே சார்ந்துள்ளன.

4.3 ஊடகமும் பொருளாதாரமும்

'தேவைக்கான உற்பத்தி' என்பது பொருளியலிலே ஒரு முக்கியமான கருத்து. அதாவது மக்களுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பொருட்களை உற்பத்தி செய்வது ஒரு வகை. உற்பத்தி செய்யப்பட்ட அல்லது செய்யப்படவுள்ள பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்குவது இன்னொரு வகை. இன்றைய உலகமயமாதல் சூழலில் பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்கும் வேலையை, அதாவது மக்களைச் சந்தைப் பொருளாக்கும் வேலையை அனைத்து மேலாதிக்க ஊடகங்களும் செய்து வருகின்றன.

ஊடகங்களின் வருமானம் 75 வீதம் விளம்பரங்களையே நம்பியிருப்பதால் பன்னாட்டு நிறுவனங்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் செயல்படுகின்றன. மேலும் ஊடகத்துறையில் அதிக வருமானம் தருவது திரைப்படம், சின்னதிரைகள் என்பதால் இன்றைய இளைஞர்கள் திரைப்படத்தில், சின்னத்திரைகளில் சேருவதையே தனது இலட்சியமாக கொண்டுள்ளனர். நிழல்களை நிஜங்களாக பார்க்கும் இவர்களால் திரைப்படதுறையில் சிலர் திடீர் பணக்காரர்களாக உருவாகின்றனர். உதாரணமாக 2019-20 ல் அம்பானியின் வருமானம் ஒரு வருடத்திற்கு 44 கோடி; ரஜினியின் வருமானம் 100 நாளில் 20 கோடி. எப்பாடுபட்டாலும் ரஜனியை தலைவர் என பட்டம்சூட்டிக்கொண்டு அவர் படத்தை பார்க்க வேண்டும் என்ற இளைஞர்கள் இருக்கும் வரையில் திடீர் பணக்காரர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

அலகு 5 — ஊடகமும் மனிதமாண்பும்

5.1 பாதிப்புகள்

ஊடகங்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் பாதிப்பை நியூசிலாந்து, டியூடைன் பல்கலைக்கழகம் ஆய்வுசெய்துள்ளது. 1972-73-களில் பிறந்த குழந்தைகளைத் தொடர்ந்து 30 ஆண்டுகள் கண்காணித்து ஒரு முடிவினை கண்டுபிடித்துள்ளது. இதன் ஆய்வுப்படி நாள்தோரும் மூன்று மணி நேரம் தொலைக்காட்சியினைப் பார்த்த குழந்தைகள் பள்ளி இறுதி வகுப்பினைக் கூட முடிக்கவில்லை. பத்து வயதிற்கு முன்பே அதிகம் தொலைக்காட்சியைப் பார்த்த குழந்தைகள் புத்திசாலிகளாக இருந்தாலும் பாதிக்கப்படுகின்றனர். மற்றும் குளோபல் வாரப் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் 24 மணி நேரமும் கேலிச்சித்திரம் தொலைக்காட்சியைப் பார்த்த குழந்தைகளிடையே வன்முறை அதிகமாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் பெரும்பாலும் கதாப்பாத்திரங்களாகவே தங்களை நினைத்து கொள்கின்றனர்.

அத்துடன் ஊடகங்கள் இளைஞர்களை பாலுணர்ச்சிக்கு அடிமையாக்கி, அவர்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இன்றைய நடிகர்கள் நாளைய தலைவர்களாகும் நிலை உள்ளது. இந்த கண்மூடித்தனமான தனிமனித வழிபாடு இந்தியாவில் உள்ளது; இந்த நிலை இலங்கையில் பெரிதாக இல்லாதபோதும் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளதையும் உணர முடிகின்றது. திரைப்படங்களை விட அதிகம் சக்தி வாய்ந்தது விளம்பரங்கள். எதை படிப்பது, எதை உடுப்பது என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது.

ஊடகங்கள் உருவாக்கும் நாகரீக மோகத்தால் இன்று பரவலாக உலக நாடுகள் தனது சுய அடையாளங்களை இழந்து வருகின்றன. ஊடகங்கள் விதைத்தவற்றில் நாம் இழந்ததுதான் அதிகமாக உள்ளது. மக்களின் போராட்ட உணர்வுகள் மழுங்கடிப்பட்டுள்ளன. உலகமயமாதலில் ஒவ்வொரு குடிமகனையும் நேரடியாக பங்குபெற செய்துள்ளது; அதன் பாதிப்பால் உலகப் பொருளாதார பாதிப்புகள் ஒவ்வொரு மனிதனின் முதுகெலும்பையும் உடைத்துவிடுகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தை பெருக்கியும் மறைமுகமாக மக்களின் வளத்தையும் அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் சூழல்களையும் உருவாக்கியுள்ளது.

5.2 விமர்சனம்

உலக அளவில் ஊடகங்கள் பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுக்கின்றன. இதற்கு மூன்று உதாரணங்கள் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை ஊடகங்கள் திசை திருப்புகிறது. குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் முழு மக்கள் தொகையில் இன்னமும் எண்பது சதவீதம் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளுக்காகவும் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்தப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து தீர்வு காணத் தூண்டாமல், பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புகிறது ஊடகங்கள். திரைப்பட நட்சத்திரங்கள், அழகிப் போட்டி, கிரிக்கெட் மாதிரியான செய்திகளை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.

இரண்டாவது, பல நேரங்களில் ஊடகங்கள் மக்களை பிளவுபடுத்துகின்றன. ஒவ்வோர் நாட்டிலும் பல தரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் ஓர் ஊரில் குண்டு வெடித்தால் போதும், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் குண்டு வைத்து அவர்கள்தான் என்று ஏதோ ஒரு மதத்தின் பெயரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படித் தெரியும் என்றால் எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் வந்தது என்று காரணம் காட்டி ஒரு மதத்தையே ஒட்டுமொத்த கொடூரக்காரர்களாக சித்தரிக்கின்றன ஊடகங்கள்.

மூன்றாவதாக ஒரு நிலபுரபுத்துவ சமூகம் — நவீன சமூகமாக மாறுகிற காலக்கட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும். அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்கு பதில் சோதிடம், மூட நம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான செய்திகளைப் பரப்புகின்றன ஊடகங்கள். ஏற்கனவே நமது நாட்டில் எண்பது சதவீத மக்கள் சாதி, மதம், மூடநம்பிக்கை போன்றவற்றில் சிக்கி மனரீதியாக பின் தங்கி இருக்கிறார்கள். அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்குக் கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக ஊடகங்கள் தூண்டுதலாக இருக்கவில்லை. ஆனால், மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலைகளை நமது ஊடகங்கள் செய்கின்றன. பல அலைவரிசைகளில் பெரும்பாலான நேரம் சோதிடம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன நிறச்சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாகச் சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கின்றன இன்றைய ஊடகங்கள்.

அலகு 6 — அறநெறியும் மனித மாண்பும் ஊடகமும்

6.1 அறநெறி

'மனிதர் திறமைகளை, ஆற்றல்களைப் பன்முகப்படுத்தி, ஒருங்கிணைத்து தனிமனித, சமூக மாண்பையும், இறையாண்மையையும் பரிணமிக்கச்செய்து பாதுகாக்கச்செய்யும் இயக்கச்சக்தியே அறநெறி' என்று தத்துவ மேதை டசில் கூறுகின்றார். 'ஒழுக்கம் சார்ந்த தீமைகளைச் சமூகத் தொடர்புக் கருவிகளின் துணைக்கொண்டு எடுத்துரைப்பதும், வருணிப்பதும், விளக்குவதும், மனித இனத்தைப்பற்றி ஆழ்ந்தறியவும், பகுத்தாயவும் பயன்படுகின்றது. சமூகத் தொடர்பு கருவிகள் மக்களுக்குத் தீமையை விளைவிக்காமல் நன்மையை விளைவிக்க வேண்டுமாயின், குறிப்பாக அறநெறி விதிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். சமூகத் தொடர்புக் கலையை பயன்படுத்துவதால் அவர்கள் தீமைக்கு உள்ளாகாமல், உலகுக்கு உப்பாகச் சுவையூட்டி, ஒளியாக விளங்குவார்கள். மனித சமுதாயத்தின் எதிர்காலம் இத்துறையைச் சரியாகப் பயன்படுத்துவதில் அடங்கியுள்ளமையால், மனித நலனுக்காகவே இதனைக் கையாள வேண்டும்.'

6.2 ஊடகமும் அறநெறி பாதிப்பும்

ஒவ்வொரு சமுதாயத்திற்கென்று தனிக் கலாச்சாரமும், நம்பிக்கையும், சுயகட்டுப்பாடுகளும் உள்ளன. ஒரு மனிதனை முழுமனிதனாக மாற்றுவது அவன் மேற்கொள்ளும் அறநெறியும், மனித மாண்புமே ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் போய் ஒருவனுக்கு பலபேர் என்ற கலாச்சாரம் ஊடகங்களின் தாக்குதலால் ஏற்படுகிறது. இன்றைய சமூக அமைப்பு ஆணாதிக்க அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதன்படி ஆண் என்பவன் உயர்ந்தவன், மேலானவன். பெண்கள் அவனைச் சார்ந்து வாழ வேண்டும், அவனுக்காக வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். நடைமுறையில் ஆணும், பெண்ணும் சமமான அறிவும் செயல்திறனும் பெற்றிருந்தாலும் சமூகத்தின் பார்வை ஆணாதிக்க பார்வை கொண்டிருப்பதால் அதன் அடிப்படையிலேயே அனைத்துச் செயல்களும் உருவாக்கப்படுகின்றன. இவ்வகையில் பெண்கள் மாண்பு அழிவதற்கு ஊடகங்கள் வழிவகுக்கின்றன.

ஊடகங்களில் ஆண், பெண் இருபாலருமே எந்த விதத்தில் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியம். பெண்ணையும், ஆணையும் சம்பிரதாய மதிப்பீடுகளில் வைத்தே காட்டுகின்றன. பெண் என்பவளை அழகோடு, மரபுகளோடு, வீட்டுவேலைகளோடு தொடர்புபடுத்தியும், ஆணை அதிகாரம், கம்பீரம், வீரம் ஆகிய குணங்களைக்கொண்டவனாகவும் சித்தரிக்கின்றன. திருநங்கைகளை மதிப்பதற்குப் பதில் அவர்களின் மனதையும், மாண்பையும் புண்படுத்துகிறது. ஊடகங்களில் சில சாதியினர் மட்டுமே அதிகம் முதன்மைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு கௌரவமும், அங்கீகாரமும் கிடைக்கின்றன. பிற இன சாதி நகைச்சுவையாகவும், கேளிக்கையாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலும் ஊடகங்கள் சித்தரிப்பது மக்களின் நலிந்த பேதமையை மட்டுமே. ஊடகங்களால் தொலைதூரத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்பு கொண்ட மனிதன் தன் அருகில் உள்ளவர்களை மறந்து விடுகிறான். இங்கு, தொலைதூரம் எளிதாய் போனது, அருகாமை தொலைந்து போனது, மனித அறநெறியும் மறைந்து போனது.

6.3 மனித மாண்பும் ஊடகமும்

எப்போதெல்லாம் சமூகம் மாற்றத்திற்குத் தயாராகின்றதோ அப்போது ஊடகம் மறுமலர்ச்சி காண ஆரம்பிக்கின்றது. போருக்குப் பின்னரான இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மீட்டெடுக்கவும் மாற்றத்தைக் கொண்டுவரவும் மாற்று ஊடகத்தின் தேவை உணரப்பட்டிருக்கிறது. வெகுஜன ஊடகத் திணிப்பிலிருந்து விலகி, விளிம்பிலிருந்து மையம் நோக்கிய கீழிருந்து மேலான தொடர்பாடல்தான் இன்றைய தேவையாக இருக்கின்றது. இது மக்களை செயலற்ற நிலையிலிருந்து செயற்பாட்டு நிலையில் வைத்திருக்கும்.

✦   ✦   ✦

வெகுஜன தகவல்தொடர்பு

வெகுஜன தகவல்தொடர்பு என்பது மக்கள் ஒரே நேரத்தில் வெகுஜன ஊடகங்கள் மூலம் பெரிய பகுதிகளுக்கு எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வு ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெகுஜன தகவல்தொடர்பு என்பது ஒரு பெரிய அளவிலான தகவல்களை பரந்த அளவிலான மக்களுக்கு வழங்குவதையும் பரிமாறிக்கொள்வதையும் குறிக்கிறது. தகவல், செய்தி மற்றும் விளம்பரம் ஆகியவற்றைப் பரப்புவதற்கு இந்த ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதால், இணையம் வழியாக கூட செய்தித்தாள், பத்திரிகை மற்றும் புத்தக வெளியீடு, வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துவது பொதுவாக புரிந்து கொள்ளப்படுகிறது.

வெகுஜன ஊடகங்கள் பல்வேறு பரிணாமங்களில் மக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் மாற்று ஊடகத்தை, குறிப்பாக இணையம் மூலமான மாற்று ஊடகத்தைச் சரியாக ஆழத்தெரிந்தால் சமூக மாற்றம் சாத்தியமாகும். மக்கள் விரும்புவதை மட்டுமல்ல, மக்களுக்குத் தேவையான விடயங்களையும் உண்மைத் தன்மையுடன் வழங்குவதுதான் ஊடகத்தின் பணி. அதனை அதிகார நிலையில் உள்ள பணம் படைத்த வெகுஜன ஊடகங்களை விட மாற்று ஊடகங்கள் அதிகம் மேற்கொள்கின்றன. இதன் மூலம் சாதாரண மக்களை அவை வலுப்படுத்துகின்றன.

பிரதான வெகுஜன ஊடகங்களுடைய பரந்த வலையமைப்பு மூலம் இலகுவில் செய்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் மாற்று ஊடகங்களில் தனிநபர் பங்களிப்பை அதிகம் பயன்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பத்தில் அது தனியாள் முயற்சியாகவே இருக்கிறது. ஆர்வமும் பொதுநல நாட்டமும் மிக்கவர்களால்தான் (செயற்பாட்டாளர்கள்) மாற்று ஊடகங்களைத் தோற்றுவிக்க முடியும். மாற்று ஊடகத்தினுடைய ஒரு ஊடகவியலாளனின் அல்லது செயற்பாட்டாளர்களின் பணி தான் சார்ந்த ஊடகத்தின் இலட்சியத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதாகும். இதன் மூலமான சமூக மாற்றமொன்றே அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கமுடியும். நிர்வாக வரம்புகளுக்கு அப்பாற்பட்டு எழுதக்கூடிய வாய்ப்பு மாற்று ஊடகங்களில் இருந்தாலும், அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களைத் தகர்த்து வெளிவருதல் என்பது பாரிய சவாலாக இருக்கின்றது.

ஒரு செயற்பாட்டாளராக உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளராக இந்தியாவில் கன்னட மொழியில் வெளிவரும் பிரதேசப் பத்திரிகையொன்றின் செய்தியாசிரியராகச் செயற்பட்ட கௌரி லங்கேஷ் கொலைசெய்யப்பட்டமை மாற்று ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலுக்கும் வன்முறைகளுக்கும் மிகச் சிறந்த சமீபத்திய எடுத்துக்காட்டாக இருக்கிறது.

அனைவருக்குமான ஊடக மொழி என்பது சாதாரண மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய எளிய மொழிநடையில் இருத்தல் அவசியம். பிரபலமான அதிக வாசகர்களைக் கொண்ட பத்திரிகைகளின் ஊடக மொழியை நோக்கும்போது அவற்றின் பிரபலத்திற்குப் பிரதான காரணமாக தெளிவான எளிய மொழிநடையை அவை கொண்டிருப்பதே காரணம் எனலாம். மேலோட்டமான ஊடகவியலாளர்கள் மொழிநடையை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். மாற்று ஊடகங்கள் சுயாதீனமானதாக மக்களுக்குப் புரியும் மொழியைக் கையாள்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள், மற்றும் புதிய ஊடகங்கள் (சமுதாய ஊடகங்கள், சமூக ஊடகங்கள், சஞ்சிகைகள், வலைப்பூக்கள், இணையத்தளங்கள்) என அனைத்தும் சமூக மாற்றத்திற்கான மாற்று ஊடகங்களாகத் தொழிற்பட்டுவந்தாலும், அச்சு ஊடகங்கள் அதிகம் அடித்தட்டு மக்களிடம் சென்றடையக்கூடியனவாக இருக்கின்றன. அதே நேரம், பிரதான வெகுஜன ஊடகத்திற்குள்ளும் மாற்று ஊடகத்திற்கான வெளி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக நோக்கற்ற தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் போன்றவற்றால் உருவாக்கப்படும் சமுதாய ஊடகங்கள் மாற்றுத் தொடர்பாடலில் மைல் கல் எனலாம். இவை சமுதாய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. இன்னொருபுறம், சாதாரண மக்களது நாட்டாரியல் நிகழ்த்துகைகள் காத்திரமான ஒரு ஊடகவடிவமாகும். கிராமப்புற மக்களின் இத்தொடர்பாடல் வடிவத்தை மாற்று ஊடகமாக கொண்டு செல்ல முடியும். பறை இசை இன்று பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்பட்டுவருவதைக் காணலாம்.

இலங்கையில் மாற்று ஊடகங்களுக்கான தேவை இன்று அதிகம் உணரப்பட்டாலும் காத்திரமான மாற்று ஊடகங்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மாற்று ஊடகங்களின் தேவை பெரும்பாலான மக்களின் பெருங்கனவாகவே இருக்கிறது. இந்நிலையில் மாற்று ஊடகத்தை உருவாக்கும் தகைமை மக்களுக்கு இருக்கிறதா என்பதும் சிந்திக்கவேண்டிய விடயம். இலங்கையின் அடிப்படைக் கல்வியில் ஊடகக்கல்வி உள்ளடக்கப்படாத நிலையில் ஊடகக்கல்வியைப் பற்றிய போதிய அறிவு சாதாரண மக்களிடம் இல்லை. ஊடக ஒழுக்கம் பற்றிய போதிய அறிவற்ற மக்களின் ஊடகவியல் சில சந்தர்ப்பங்களில் மாற்று ஊடகவியலின் அடிப்படையையே சிதைத்துவிடக்கூடும்.

முடிவுரை

முடிவுரை

ஊடகங்கள் தவறு செய்வதில்லை. மாறாக அதனைப் பயன்படுத்தும் மனிதர்கள்தான் தனது சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். ஊடகங்களை சமூக மாற்றத்திற்கும் மறுமலர்ச்சிக்கும் பயன்படுத்தவேண்டும். ஊடகங்கள் வளர்த்து இச்சமூகத்தில் பரவிக்கிடக்கும் தீமைகளைக் களைந்து, வேற்றுமைகளை ஒழித்து, ஒற்றுமையை வளர்க்க வேண்டும். ஊடகங்கள் பற்றிய தெளிவான அறிவு, அதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஊடகங்கள் மூலம் மனித மாண்பும், அறநெறியும் வளரவேண்டும். நல்ல அச்சு வெளியீடுகளை ஊக்குவிக்க வேண்டும். ஊடக உணர்வை ஏற்படுத்த உண்மையான மறுமலர்ச்சி ஏற்படுத்தி அவற்றிற்கு ஆதரவளிக்க வேண்டும். கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊடகங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்களை உருவாக்க வேண்டும்.

என்றும் நன்றியுடன் — இப் பத்தியை எழுதத்தூண்டிய சமூகப்போராளி சண்முகம் தவராசா மற்றும் இவ் ஆய்வுக்கு தகவல்களை தந்துதவிய எனது நீண்ட பயணத்தில் தொடர்ந்து வரும் நட்புக் குழுமத்தின் நண்பர்களான ஊடகவியலாளர்கள் ஆர்.கே.இராதகிருஸ்ணன், மூத்த ஊடகவியலாளர் மாலன், அருட்தந்தை ஜகத் கஸ்பராஸ், குணசேகரன், கார்த்திகைச்செல்வன், குறிப்பாக சி. பாஸ்டின் ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

துணை நின்ற நூல்கள்

1) சுரேஷ் பால். 'மீடியா உலகம்'. சென்னை: தீபிகா வெளியீடு, 1999.

2) பவா சமத்துவன். 'தொலைக்காட்சி உலகம்'. சென்னை: புதுயுகம் செய்முறை செம்மையாக்கம், 2007.

அக
கிருஸ்ணா அம்பலவாணர்
ஊடகவியல் ஆய்வாளர் — ஐயாத்துரை நடேசன் நினைவு ஆவண பதிப்பு
📰 மானுட விடுதலைக்கான பாதையில் ஊடகங்கள் · ஊடகம் — தோற்றம் · செல்நெறி · செயல் நெறி

Post a Comment

0 Comments