முள்ளிவாய்க்காலின் பின்னரான விடுதலை அரசியல் - மே 18 சிறப்பு கட்டுரை

மே 18 சிறப்பு கட்டுரை

முள்ளிவாய்க்காலின் பின்னரான விடுதலை அரசியல்

ஒர் பார்வை — உலகமயம், வல்லரசுகள், மூன்று தளங்கள்

✍ கிருஸ்ணா அம்பலவாணர் | 🕯 மே 18 நினைவேந்தல்

உலகமயச் சூறாவளியில் தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைகள் எனும் வாழைத் தோப்புகளின் வாழ்வு கேள்விக் குறியாகியுள்ளது. எங்கோ பனிமூட்டத்தின் இடுக்கில் ஒற்றைக் கீற்றுப் போல, உலகமயக் கருணையினாலே தேசிய இனங்கள் விடுதலையை எட்டிப் பார்க்கின்றன.

உலக அரசியல் நகர்வும் விடுதலையும்

முப்பது நாற்பது ஆண்டுகள் முன் சொல்லி வைத்தது போல் நடந்த தேசிய விடுதலைகள் இப்போது ஒரு வழமையாக இல்லை. கொசவா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் விடுதலைகளும் ஒற்றை மைய அரசியல், நிதி மூலதன, தகவல் ஆதிக்க அரசியலின் கருணையினால் நடந்தவையாக ஆகிவிட்டன. இடதுசாரி முகாம் என்று சொல்லப்பட்ட வல்லரசுகள் இதுபோன்ற மக்கள் விடுதலைக்கு எதிர்முகம் கொண்டு விட்டதால், உலகில் பொருளாதார, அரசியல் ஆதிக்கப் புதிய ஒழுங்கைத் தீர்மானிக்கும் சக்திகளே இவற்றையும் தீர்மானிப்பதாக ஆகிவிட்டன.

அமெரிக்க அறிக்கை — உலக அரசியல் 20-21

"உலகம் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. மிகப் பெரிய பணக்கார வர்க்கம் ஒன்று உலகெங்கும் உருவாகியுள்ளது. அதைச் சுற்றி, அவர்களுக்குச் சேவை செய்யும் நடுத்தர வர்க்கம் ஒன்றும் உருவாகி வருகிறது. பெரும்பாலான மக்கள் ஏழைகளாகப் போனார்கள். இந்த ஏழைகள் போராடுவார்கள். மக்கள் திரள் எழுச்சிகள், தடுத்து நிறுத்த முடியாமல் போகும்."

தொடர்ந்து அமெரிக்க முதலாளியச் சிந்தனையாளரான ஹென்றி கிஸிங்கர் கேட்டார்: "இந்தப் போராட்டத்தை எவ்வாறு கையாண்டு அடக்குவது?"

மக்கள் எழுச்சிகளை அடக்கும் சோதனைக் கூடங்கள் என்பதற்கு முள்ளிவாய்க்கால் படுகொலையும், இந்தியாவின் மத்திய மாநிலங்களின் பழங்குடி மக்கள் வேட்டையும் வெளிப்படையான சாட்சியங்களாகின. சுருங்கச் சொல்வதாயின் — மக்கள் எழுச்சிகள் உருவாகக் காரணமாக இருந்து, ஒரு எல்லை வரை வளர்ச்சிக்குக் கொண்டு செல்வது, பின்னர் அதனை அரச பயங்கரவாதம் வழியாய் உள்மடங்கச் செய்வது என எல்லாமும் உலகமயம் உண்டு பண்ணும் கட்டம் கட்டமான நகர்வுகளேயாம்.

இரு துருவங்களை உண்டு பண்ணி இயக்குதலும், மோதலில் இரு துருவங்களிடமிருந்தும் ஆதாயத்தைக் கரந்து கொள்வதும் — இந்தப் புதிய ஒழுங்குகளின் உலக நிரலாக ஆகியுள்ளது.

ஈழமும் வல்லரசு வியூகமும்

2005 இலங்கைத் தேர்தலில் தேர்தல் புறக்கணிப்புச் செய்தனர் புலிகள். ஆயுதங்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்ற பழைய சுலோகம் காலாவதியாகி விட்டதைக் கண்டு கொள்ளாமல் ஆயுதங்களால் எதிர்கொள்ள முடிவு செய்தனர். நரியை விட, சிங்கமே நரவேட்டையாடும் மிருகம் என்பதைக் காலம் உணர்த்தியது.

தேர்தல் புறக்கணிப்பு அமெரிக்கச் சார்பு ரணிலின் வெற்றியைத் தடுத்து, சீனச் சார்பு இராசபக்ஷேக்களை வெற்றிக் கொள்ளச் செய்தமையால் அமெரிக்காவும் மேற்குலகும் புலிகளின் வீழ்ச்சியை விரும்பினர். 2005-ம் ஆண்டின் பின்பு மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் 11 ஆயுதக் கப்பல்களில் 5 ஆயுதக் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்து உதவியது.

பிரிட்டன் ஆயுத வழங்கல் — நாடாளுமன்ற சாட்சியம்

"2009-ல் மட்டும் பிரிட்டன் ரூ 7000 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது" என்று டாக்டர் ராகுல் சாய்ஸ் என்ற பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பிப்ரவரி 13, 2009-ல் தெரிவித்தார். "அதற்காக வெட்கப்படுகிறோம்" என்று அவர் தெரிவித்த போதிலும், உண்மை வெளியே வந்தது.

ஜெனிவாவில் கியூபா எள்ளலாகக் குற்றம் சுமத்தியது: "விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக வழங்கப்பட்ட ஆயுதங்களில் 40 சதவீத ஆயுதம் நீங்கள் வழங்கியதுதானே?"

இரட்டைக் கோபுர மரணங்களும், இரட்டை வாய்க்கால் கொலைகளும் (முள்ளிவாய்க்கால், இரட்டைக் கால்வாய்) வேறு வேறு நிகழ்வுகள் அல்ல — உலகமய அரசியலின் முன்னும் பின்னுமான விளைவுகள் இவை. மூவாயிரம் மரணங்கள் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பெற்ற விசுவ ரூபம், 50 ஆயிரம் பேர் கொலையுண்ட இரட்டைவாய்க்கால் பெறவில்லை என்பது உலகின் இரட்டை நிலைப்பாட்டின் வெளிப்பாடே.

முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் — இந்த மண்ணில் சிந்திய இரத்தம் இன்றும் நீதி கேட்கிறது

நாவலின் குரல் — சுகுமாரின் வாசகம்

இன்னும் வெளிவராத அந்த ஈழத்து நாவலில் சுகுமார் என்ற போராளி சொல்லும் வாசகம் இப்படி வரும்:

"விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்கலாம். அதற்கு மேலும் கொடுக்க முடியாது. கொடுக்க கூடாது. கொடுக்க நேர்ந்தால் நாம் தோற்றுவிடக்கூடும்."

இராசதந்திர அணுகுமுறைகளைக் கைவிட்டு, இலட்சியவாதத்தையும், தியாகவாதத்தையும், இராணுவவாதத்தையும் முன்னிறுத்தியதால் நாம் வீழ்ந்து போனோம். எந்த ஒரு விடுதலைப் போரிலும் இத்தனை ஆயிரம் கல்லறைகள் எழும்பிய வரலாறு இல்லை.

✦   ✦   ✦

மூன்று தளங்களில் விடுதலை அரசியல்

ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக, ஆயுதப் போராட்டமற்ற வழிமுறையை வரலாறு கோருகிறது. இந்த நிலையில் மூன்று தமிழர்களின் தோள்களும் சுமக்க வேண்டிய தொடரும் போராட்டம் உள்ளது:

  • முதலாம் தளம் — ஈழத் தமிழ்மக்கள்

    அனாதரவான ஈழமக்களின் மனசின் எல்லா அசைவுகளும் மூடப்பட்டுள்ளன. கை, கால்கள் மட்டுமல்ல, மனசை வெளிப்படுத்தும் நாக்குகளும் வெட்டப்பட்டு விட்டன. தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாலைவனத்தில் அவர்கள் ஜீவிக்கின்றனர். அந்தத் தளத்தில் இணக்கப்பாடு, சமரசம் என்ற நல் நோக்கங்களை ஏற்றுக்கொண்டால் கூட சிங்களர் அந்த எல்லைகளைத் தாண்டி விட்டார்கள் என்ற உண்மையை உணர வேண்டும்.

  • இரண்டாம் தளம் — புலம்பெயர் தமிழர்கள்

    யூதர்களுக்கு அடுத்து, நாடற்றவர்களாய் ஆகிய ஈழர்கள் உலக அளவிலும் எண்ணிக்கையளவிலும் யூதர்களை விடப் பெரிய சக்தி. சில நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்யும் சக்தியாகவும் திரண்டுள்ளார்கள். தமிழர் பிரதேசங்களில் மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழரையும் உள்ளடக்கிய பொதுமக்கள் வாக்கெடுப்பினை நடத்தக் கோரி தத்தம் வாழ்விடங்களில் அழுத்தம் தரும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

  • மூன்றாம் தளம் — தாயகத் தமிழர்

    முள்ளிவாய்க்கால் முடிவுக்கு, தமிழக அரசியல் தலைமைகள் தத்தமது இயக்கங்களின் இருப்பைத் தக்க வைக்க ஈழப் பிரச்சனையை பணயப் பொருளாக்கியதும் காரணம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழர்களும் பங்காற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் வலிமையான தளமாக தமிழகம் இனி உருமாற வேண்டும்.

மே 18 நினைவேந்தல்
மே 18 நினைவேந்தல் — உலகெங்கும் தமிழர்கள் நினைவுகூருகின்றனர்

ஜெனிவா — புலம்பெயர் தமிழரின் வெற்றி

தமிழர்களிடம் உலகளாவிய ஒரு உளவியல் திருப்தி ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் முடிந்த 16 ஆண்டுகளின் பின் உலகின் கவனத்தை ஈர்க்க முடிந்திருக்கிறது என்ற திருப்தி அது. ஒன்றுமில்லாத தீர்மானமாக இருந்தாலும் இலங்கை மீது கேள்வி எழுப்ப முடிந்தது என்ற ஒரு உள் ரசிப்பு அனைத்துத் தமிழரிடமும் காணமுடிகிறது.

கண்காணிப்பு ஆய்வு மையம் (ORF) சுட்டிக்காட்டுவது

"ஜெனிவா வெற்றியானது தமிழினத்தைப் பொறுத்தவரையில் அது புலம்பெயர் தமிழர்களையே சாரும். எனவே இன்னும் அவர்கள் வலுப் பெறுவார்கள். அதுபோன்ற சூழல் வருமானால் அவர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் தனிநாடு என்ற இலக்கை நோக்கியதாகவே இருக்கும்."

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கால்வைக்க முடியாமல் இராசபக்ஷேயை திருப்பி ஓட வைத்தது, ஐ.நா விசாரணைக்குழு அறிக்கை, அமெரிக்கத் தீர்மானம், கனேடிய மண்ணில் நினைவுச்சின்னம் — இவை அனைத்தும் புலம்பெயர் தமிழர்கள் சக்திவாய்ந்த செயலாளிகள் என்ற சேதியைச் சொல்கின்றன.

✦   ✦   ✦

தெளிவான பாதை — முன்னோக்கிய பயணம்

சர்வதேச அரசியல் வியூக நகர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலை அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியும். உலக அரசியலே உள்ளூர் அரசியலுக்கு வழிகாட்டி. "இரட்டை வாய்க்கால் அழிப்பு, தமிழினத்துக்கு ஏற்பட்ட அழிவை மட்டும் போதிக்கவில்லை. தமிழினத்துக்கு இருக்கக்கூடிய சர்வதேச அரசியற் பலத்தின் முக்கியத்துவத்தையும் போதித்துள்ளது."

"எதிரி எமது இராணுவ அரண்களை மட்டும் நொறுக்கவில்லை. கூடவே நம்மிடமிருந்த கற்பனைகளையும் தவறான சிந்தனைகளையும் நொறுக்கியிருக்கிறான்" — இந்த உண்மையை உணர்வதில்தான் மீட்சி தொடங்குகிறது. நாம் முடிக்கப்பட்டதற்கான, வீழ்ந்தததற்கான காரணத்தை நம்மிடையேயும் உலக சமூகத்திடையேயும் தேடுவதே சுய விமர்சனமாய் கற்றுக்கொள்ளல்.

"முள்ளிவாய்க்கால் முடிவல்ல, ஆரம்பம். தெளிவான, மெய்மையான, யதார்த்தமான அடிப்படையை தமிழினம் வகுத்துக்கொள்ள வேண்டிய காலம் இது. இது மூன்று தமிழர்களின் தோள்களும் சுமக்க வேண்டிய தொடரும் போராட்டம்."

நீதி கிடைக்கும் வரை நினைவு தொடரும். போராட்டம் தொடரும். தமிழினம் தொடரும்.

கி
கிருஸ்ணா அம்பலவாணர்
மே 18 நினைவேந்தல் கட்டுரை · 2025
🕯 மே 18 · தமிழீழ நினைவு தினம் · முள்ளிவாய்க்காலின் பின்னரான விடுதலை அரசியல்

Post a Comment

0 Comments