ஈழமும் திராவிடமும்: நான் ஏன் இரண்டையும் சுமக்கிறேன்?

ஈழமும் திராவிடமும்: நான் ஏன் இரண்டையும் சுமக்கிறேன்

✍ கிருஷ்ணா அம்பலவாணர்

நான் கிருஷ்ணா அம்பலவாணர். ஈழத்தமிழன். திராவிடத் தமிழ்த் தேசியச் சிந்தனையாளன். இந்த இரண்டு அடையாளங்களையும் ஒன்றாகச் சுமப்பதால், சிலர் தொடர்ந்து கேள்வி கேட்கிறார்கள். "திராவிடத் தமிழ்த் தேசியம் என்றால் என்ன?" "ஈழத்துக்கும் திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்?" சிலர் கேள்வி கேட்கிறார்கள். சிலர் கேலியும் வன்மமும் செய்கிறார்கள். நான் பலமுறை மௌனம் காத்தேன். ஆனால் மௌனம் சிலருக்குப் பலவீனமாகத் தெரிகிறது. எனவே இங்கே தெளிவாகப் பதிவு செய்கிறேன்.

திராவிடத் தமிழ்த் தேசியம் என்பது இரண்டு வெவ்வேறு விஷயங்களின் கலவை அல்ல. அது தமிழ்த் தேசியத்தைச் சமூக நீதியுடன் இணைக்கும் பார்வை. தமிழ்த் தேசியம் மொழியையும், பண்பாட்டையும், தன்மானத்தையும் பேசுகிறது. திராவிடப் பார்வை சாதியை, மூடநம்பிக்கையை, ஆணாதிக்கத்தை, மேலாதிக்க மொழி அரசியலைக் கேள்வி கேட்கிறது. இரண்டையும் பிரித்தால் என்ன நடக்கும்? சாதி நீதியைப் பேசாத தமிழ்த் தேசியம், உள்ளேயே ஏற்றத்தாழ்வைச் சுமக்கும். தமிழ்த் தன்மானத்தைப் பேசாத சமூக நீதி, வெறும் பொதுவான சீர்திருத்தமாகச் சுருங்கும். திராவிடத் தமிழ்த் தேசியம் என்பது, தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டும்; அந்தத் தன்மானம் சாதி, பாலினம், மூடநம்பிக்கை ஆகியவற்றால் சிதைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாடு.

கிருஷ்ணா அம்பலவாணர்
கிருஷ்ணா அம்பலவாணர்

ஈழப் போராட்டம் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம். அது தேசிய விடுதலைப் போராட்டம். ஆனால் ஒரு தேசியம் உள்ளே சாதியை, பெண் அடிமைத்தனத்தை, மூடநம்பிக்கையை ஏற்றுக்கொண்டால், அது முழுமையான விடுதலை அல்ல. பெரியார் முன்வைத்த சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவை ஈழத் தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தாது. அதை இன்னும் தார்மீகமாகவும், உள்நாட்டில் நெருக்கமாகவும் ஆக்கும். புதுடெல்லியின் மேலாதிக்க அரசியல், ஈழத் தமிழர்களின் உரிமையை எப்போதும் சந்தேகத்துடன் பார்த்தது. அந்த மேலாதிக்க அரசியலுக்கு எதிரான சிந்தனைத் தளம் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தால் வளர்க்கப்பட்டது. மொழி உரிமை, மாநில சுயாட்சி, சமூக நீதி ஆகியவை அந்த எதிர்ப்பின் அடித்தளம். இந்த அடித்தளம் சிதறினால், ஈழத் தமிழர்களின் உரிமைக்கான தார்மீக ஆதரவு வெளியும் நெருக்கப்படும்.

நான் இரண்டையும் இணைப்பதற்குக் காரணம் தெளிவு. நான் ஈழத்தமிழன். என் மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே நேரத்தில், விடுதலை என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல என்று நம்புகிறேன். சாதியற்ற, தன்மானம் கொண்ட, பகுத்தறிவுள்ள சமூகமே உண்மையான விடுதலையின் அடிப்படை. திராவிடச் சிந்தனையை ஏற்றுக்கொள்வது ஈழத் தேசியத்தைக் கைவிடுவதல்ல. அதை இன்னும் ஆழமாக்குவது. கேள்வி கேட்பவர்களுக்கு என் பதில் இதுவே: நான் இரண்டையும் சுமக்கிறேன். ஏனெனில் இரண்டும் என் தமிழ்த் தன்மையின் பகுதிகள். ஒன்றை நிராகரித்து மற்றொன்றை ஏற்றுக்கொள்ளும் குறுகிய தமிழ்த் தேசியத்தை நான் ஏற்கேன்.

கிருஷ்ணா அம்பலவாணர்
கிருஷ்ணா அம்பலவாணர்

நிலம் கிடைத்தாலும், மானம் சிதைந்திருந்தால் அது விடுதலையல்ல.

இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. "திராவிடம் உன் கருத்து. ஆனால் ஏன் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும், விடுதலைப் புலிகளையும் இதில் சம்பந்தப்படுத்துகிறாய்?" இந்தக் கேள்விக்கு என் பதில் தெளிவு. நான் யாரையும் யாருடன் கலக்கவில்லை. விடுதலைப் புலிகளின் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டம். திராவிடச் சிந்தனை சமூக விடுதலைச் சிந்தனை. இரண்டையும் ஒன்றாக்கவில்லை. ஆனால் இரண்டையும் எதிரெதிர் என்று சொல்வதையும் ஏற்கேன். ஏனெனில் ஒரு தேசியம் வெளியில் சுயநிர்ணயத்தை வென்றாலும், உள்ளே சாதியை, ஆணாதிக்கத்தை, மூடநம்பிக்கையை ஏற்றுக்கொண்டால், அது முழுமையான விடுதலை அல்ல. நிலம் கிடைத்தாலும், மானம் சிதைந்திருந்தால் அது விடுதலையல்ல.

தலைவர் முன்வைத்தது தமிழர் சுயநிர்ணயம். பெரியார் முன்வைத்தது தமிழர் சுயமரியாதை. இரண்டும் ஒன்றல்ல. ஆனால் இரண்டும் தமிழரின் மானம் தொடர்பானவை. நான் தலைவரின் பெயரைப் பயன்படுத்தி திராவிடத்தைத் திணிக்கவில்லை. நான் பெரியாரைத் தலைவராக்கவும் இல்லை. நான் சொல்வது ஒன்றுதான்: தமிழரின் விடுதலை, தமிழரின் சுயமரியாதையுடன் இணைந்திருக்க வேண்டும். வன்மம், திட்டல், இழிவுபடுத்தல் ஆகியவை எந்த விடுதலை இயக்கத்தின் நெறியும் அல்ல. மாவீரர்களைப் போற்றி எழுதிவிட்டு, அவர்கள் காட்டிய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் மீறுவது, உண்மையில் அந்தப் போராட்டத்தையே சிறுமைப்படுத்துவதாகும்.

பெரியார்
பெரியார்

நான் தலைவரையும் புலிகளையும் இழுக்கவில்லை. நான் விடுதலையின் அர்த்தத்தை ஆழப்படுத்த முயல்கிறேன். இதை ஏற்காதவர்கள் மறுக்கலாம். ஆனால் இதை "தலைவரை இழுத்தல்" என்று சொல்வது வாதமல்ல. அது தப்பான புரிதல். இது தற்காப்பு அல்ல. இது என் நிலைப்பாடு.

✦   ✦   ✦
கி
கிருஸ்ணா அம்பலவாணர்
ஈழத்தமிழன் | திராவிடத் தமிழ்த் தேசியச் சிந்தனையாளன்

Post a Comment

0 Comments