வட்டுக்கோட்டை தீர்மானத்தின் சமகாலப் பரிமாணம்: ஒரு முற்போக்கு இடதுசாரி விமர்சனப் பார்வை

நூல் மதிப்புரை · அரசியல் விமர்சனம்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் சமகாலப் பரிமாணம்: ஒரு முற்போக்கு இடதுசாரி விமர்சனப் பார்வை

✍ கிருஸ்ணா அம்பலவாணர் | ஈழத்தமிழன் | திராவிடத் தமிழ்த்தேசிய சிந்தனையாளன்

உட்புகுமுன்

"வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?" என்ற நூல்பற்றிய பார்வையை படிப்பதற்கு முன், வட்டுக்கோட்டை தீர்மானம் — வரலாறும் சமகாலப் பேசுபொருளும் பற்றி அறிந்துகொள்ளுதல் அவசியமானது என்றே நம்புகின்றேன்.

இலங்கை அரசியல் வரலாற்றில் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' (மே 14, 1976) என்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மிக முக்கியமான, திருப்புமுனையான மைல்கல்லாகும். யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள வட்டுக்கோட்டையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) சார்பில் தந்தை செ.ஜ.வெ. செல்வநாயகம் அவர்களின் தலைமையில் கூடிய இந்த மாநாடு தமிழர்களின் அரசியல் பாதையை முழுமையாக மாற்றியமைத்தது. அதற்கு முந்தைய தசாப்தங்களில், தமிழ் அரசியல் தலைமைத்துவம் நாடாளுமன்ற ஜனநாயக வழிமுறைகளையும், ஒற்றையாட்சிக்குள்ளான சமஷ்டி (கூட்டாட்சி) முறையிலான சுயாட்சியையுமே அமைதி வழியில் கோரி வந்தது.

இருப்பினும், அரச அனுசரணையுடனான திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகள், 'சிங்களம் மட்டும்' சட்டத்தின் மூலமான மொழி ரீதியான ஒடுக்குமுறைகள், மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு மற்றும் தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான இனக்கலவரங்கள் என்பன ஒற்றையாட்சி அரசமைப்பிற்குள் இணங்கி வாழ்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்தன. இதன் விளைவாகவே, தமிழ் மக்கள் தங்களின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, தங்களின் வரலாற்றுப்பூர்வ தாயகப் பிரதேசங்களை ஒன்றிணைத்து 'சுதந்திர, இறையாண்மையுள்ள, மதச்சார்பற்ற, சோசலிசத் தமிழீழ அரசை' மீட்டெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் ஜனநாயக ரீதியாகப் பிரகடனப்படுத்தினர்.

வட்டுக்கோட்டை தீர்மானம் — வரலாற்றுப் பின்னணி
தந்தை செ.ஜ.வெ. செல்வநாயகம் — வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தலைமை முன்னெடுப்பாளர்

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்ட நிலையிலும், 2009 ஆயுதப் போராட்ட முடிவுக்குப் பின்னரான இன்றைய சமகால அரசியல் சூழலிலும் அது ஏன் இன்னும் முதன்மையான பேசுபொருளாக இருக்கிறது என்பது மிக முக்கியமானது. அது வெறும் கடந்த கால வரலாறு மட்டுமல்ல; எத்தீர்மானத்தை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்களோ, அதற்குக் காரணமான ஒற்றையாட்சி அரசின் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றும் தீர்க்கப்படாமல் அப்படியே நீடிக்கின்றன. இன்று தொல்லியல் பாதுகாப்பு என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் முறையான நில ஆக்கிரமிப்புகள், வடக்கு-கிழக்கில் தொடரும் தீவிர இராணுவமயமாக்கல் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது போன்ற சூழல் இத்தீர்மானத்தின் சமகாலத் தேவையை உணர்த்துகிறது.

மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உலகளாவிய புவிசார் அரசியல் போட்டிகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், வட்டுக்கோட்டை தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாடே சர்வதேச அரங்கில் தமிழர்களுக்கான சட்டபூர்வ மற்றும் ஜனநாயக அடிப்படையிலான நங்கூரமாகத் திகழ்கிறது. தேசங்களின் அடையாளங்களை ஒடுக்குவதன் மூலம் அமைதியை நிலைநாட்ட முடியாது, மாறாக ஒரு தேசத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே தீர்வு சாத்தியம் என்பதை இத்தீர்மானம் இப்போதும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

எனவே இனி நூல் பற்றிய ஓர் விமர்சனப்பார்வை.

நூல் மதிப்பீடு: தென்னிலங்கை இடதுசாரியின் துணிச்சலான குரல்

இத்தகையதொரு வரலாற்றுப் பின்னணியில் நின்று, நவசமசமாஜ கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தோழர் ரணத் குமாரசிங்க எழுதியுள்ள "வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?" என்ற சிறிய நூல் மிக முக்கியமானதொரு அரசியல் உரையாடலைத் தோற்றுவிக்கிறது.

தென்னிலங்கை அரசியல் சூழலில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதமாகவோ அல்லது பிரிவினைவாதமாகவோ மட்டுமே சித்தரிக்கும் பேரினவாதப் பரப்புரைகள் மேலோங்கியுள்ளன. இத்தகையதொரு சூழலில், நவசமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளரும், 'ஹரய' சிங்கள முற்போக்கு வாரப் பத்திரிகையின் ஆசிரியருமான தோழர் ரணத் குமாரசிங்க போன்ற ஒரு சிங்கள இடதுசாரித் தலைவர், தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமைக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன், இத்தகையதொரு நூலை எழுதியிருப்பது பாராட்டுதலுக்குரிய அரசியல் நகர்வாகும்.

ஆசிரியர் இந்நூலில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மிகத் தெளிவாக வரையறுக்கிறார். தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் இறுதித் தேர்வாகவே இத்தீர்மானத்தை நோக்க வேண்டியிருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். கடந்த ஐம்பதாண்டு கால அரசியல் நிகழ்வுகளை, வர்க்க மற்றும் ஒடுக்கப்படும் தேசங்களின் விடுதலைப் பார்வையில் நின்று மதிப்பிடும் ஆசிரியர், இன்றைய நெருக்கடியான அரசியல் சூழலிலும் தமிழ் மக்களுக்கான இறுதித் தெரிவாக 'சுயநிர்ணய உரிமைக்கான கோட்பாடு' மட்டுமே எஞ்சியிருக்கிறது என்பதைத் துணிச்சலுடன் வாதிடுகிறார்.

இந்நூலின் பலம் என்பது, வட்டுக்கோட்டை தீர்மானத்தை வெறும் கடந்தகால வரலாறாகப் பார்க்காமல், அதன் இன்றைய நிலையை தற்கால புவிசார் அரசியல் மற்றும் உள்நாட்டு அரசியல் சூழலோடு ஒப்பிட்டு நோக்குவதாகும். தமிழ் தேசிய அரசியல் சக்திகள், தென்னிலங்கையின் இடதுசாரி முற்போக்கு சக்திகளுடன் இணைந்து எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வழியை இந்நூல் மறைமுகமாகக் கோடிட்டுக் காட்டுகிறது.

விமர்சனப் பார்வையும் முடிவும்

இருப்பினும், ஒரு விமர்சனப் பார்வையில் நோக்கும்போது, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் போதாமைகள், சமகாலத்தில் (போருக்குப் பின்னரான சூழலில்) தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் (பொருளாதார நெருக்கடிகள், நில ஆக்கிரமிப்புகள்) மற்றும் உலகளாவிய ஏகாதிபத்தியச் சூழல் இத்தீர்மானத்தை எவ்வாறு பலவீனப்படுத்தியுள்ளது அல்லது உருமாற்றியுள்ளது என்பதை இன்னும் சற்று விரிவாக இந்நூல் அலசியிருக்கலாம் என்ற பார்வையும் எழுகிறது.

சுருக்கமாகக் கூறின், தென்னிலங்கையில் இருந்து ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூல், முற்போக்குச் சிந்தனையாளர்களும் தமிழ் தேசிய அரசியலில் ஈடுபடுவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு ஆவணமாகும். பேரினவாதச் சகதிக்குள் சிக்கியுள்ள தென்னிலங்கை அரசியலில், தமிழ்-சிங்கள உழைக்கும் மக்களின் கூட்டுப் போராட்டத்திற்கும், ஒடுக்கப்படும் தேசங்களின் விடுதலைக்கும் இத்தகைய மார்க்சிய-இடதுசாரிப் பார்வைகள் காலத்தின் கட்டாயமாகும் என்பதை இந்நூல் மீள வலியுறுத்துகிறது.

நூலாசிரியர் அறிமுகம்

தோழர் ரணத் குமாரசிங்க தென்னிலங்கையின் முன்னணி முற்போக்கு இடதுசாரித் தலைவர்களில் ஒருவராவார். நவசமசமாஜ கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளராகப் பணியாற்றி வரும் இவர், 'ஹரய' சிங்கள முற்போக்கு வாரப் பத்திரிகையின் ஆசிரியருமாவார். பேரினவாத அரசியல் சூழலிலும் ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமைக்காகத் தென்னிலங்கையில் இருந்து தொடர்ந்து துணிச்சலுடன் குரல்கொடுத்து வரும் முதன்மையான சித்தாந்தவாதிகளில் ஒருவர் இவர்.

கி
கிருஸ்ணா அம்பலவாணர்
ஈழத்தமிழன் | திராவிடத் தமிழ்த்தேசிய சிந்தனையாளன் | @krishnaambalav1
📖 வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 · சுயநிர்ணய உரிமை · ஒரு நூல் மதிப்புரை

Post a Comment

0 Comments