ஈழத்துத் துயரத்தின் கவிதை வடிவம்: கவிஞர் புவியரசு அவர்களின் வாழ்வும் ஈழப்பணியும்
ஓர் அஞ்சலிக்குறிப்பு
ஈழ மண்ணின் வலியையும், மக்களின் தியாகத்தையும் தன் பேனா முனையால் சுமந்த கவிஞர் புவியரசு அவர்களுக்கு, அவரது ஈழப்பணியை முன்னிறுத்திச் செலுத்தப்படும் ஆழமான அஞ்சலிப் பதிவு இது.
ஈழத்துத் தமிழ் வேறு, தமிழகத் தமிழ் வேறு அல்ல; தமிழர்களின் வலியும், கலை இலக்கியமும் ஒன்றுதான் என்ற உன்னதப் புரிதலைத் தன் வாழ்நாள் முழுவதும் வளர்த்தெடுத்த பெருமகன் அவர். அவருக்கும் எமக்குமான உறவு எங்கள் பாசத்துக்குரிய அக்கா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மூலமே உருவானது.
தமிழ்ச் சமூகத்தின் பேராளுமையும், இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒப்பற்ற கவிஞருமான புவியரசு அவர்கள் (வயது 96) 2026 ஜூன் 30 அன்று கோவையில் இயற்கை எய்தினார். இந்தச் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களை, குறிப்பாக ஈழத் தமிழர்களை ஆழமான துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
1970-களில் கவிதை உலகில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய 'வானம்பாடி' இயக்கத்தின் தூணாக விளங்கியவர் புவியரசு. அவர் வெறும் இலக்கியவாதியாக மட்டுமே தன் வாழ்வைச் சுருக்கிக் கொள்ளவில்லை; கடல் கடந்த தமிழர்களின் உரிமைக்குரலாகவும், ஈழத் துயரத்தின் சாட்சியமாகவும் திகழ்ந்தார்.
வானம்பாடி இயக்கமும் ஈழத்து கவிதை எழுச்சியும்
புவியரசு அவர்கள் தோற்றுவித்த 'வானம்பாடி' கவிதை இயக்கம் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு புதிய திருப்புமுனை. அது 'மானுடம் பாடும்' இயக்கமாக மலர்ந்தது.
'வானம்பாடி' கவிதை இயக்கம் எல்லை கடந்த இலக்கியப் பாலம் என்றால் மிகையாகாது. இந்த இயக்கம் வெறும் தமிழ்நாட்டுடன் நின்றுவிடாமல், கடல் கடந்து ஈழத்து முற்போக்கு இலக்கியச் சூழலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஈழத்துக் கவிஞர்களின் ஊக்கம் 'வானம்பாடி' கவிதை இயக்கத்தின் மூலம் புது உத்வேகம் பெற்றது. எங்கள் விடுதலைக் கவிஞர்களான புதுவை இரத்தினதுரை, நாவண்ணன், தமிழன்பன், எழில் அரசு உள்ளிட்ட பல ஆளுமைகளுக்கு புவியரசுவின் முற்போக்கான, ஆவேசமான கவிதை நடை ஒரு பெரும் வழிகாட்டியாக அமைந்தது. ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்காகக் கவிதை ஆயுதம் ஏந்தலாம் என்ற துணிவை இருதரப்பு கவிஞர்களும் பரிமாறிக் கொண்டனர்.
தொலைந்து போய்விடுவாய்!"
என்ற வரிகளில், மறைந்த ஈழத்து வலி, அதன் துயரம், கவிஞர் புவியரசு அவர்களின் வரிகளில் எப்போதும் தீர்க்கதரிசனம் மிக்கவையாகவே மிளிர்ந்தன.
"தேடாதே, தொலைந்து போய்விடுவாய்,
வழிகள் மாற்றி வைக்கப்பட்டு இருக்கின்றன"
என்ற கவிதை வரிகள், ஈழப் போராட்டத்தின் சூழலுக்கும், எம் மக்களின் அவல நிலைக்கும் மிகப்பொருத்தமாக அமைந்தவை ஆகும். போரின் கோரப்பிடியில் சிக்கி, சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறி, தங்களின் அடையாளங்களையும் உறவுகளையும் தொலைத்துவிட்டுத் தவித்த ஈழத் தமிழர்களின் அவல நிலையை இந்த வரிகள் பிரதிபலிப்பதாகவே ஈழத்து இலக்கியவாதிகள் கொண்டாடுகின்றனர்.
🔸 2009-ல் நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை புவியரசுவின் அக உலகை உலுக்கியது. 'கையொப்பம்' நூலுக்காக அவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற அதே காலகட்டத்தில்தான் ஈழத்தின் பெரும் துயரமும் நிகழ்ந்தது. விருது தந்த மகிழ்ச்சியை விட, ஈழத் தமிழர்களின் மரணங்கள் தந்த வடுவே அவரிடம் மேலோங்கி இருந்தது.
இக்காலகட்டத்தில், எம் பாசத்துக்குரிய இளங்குழந்தை பாலச்சந்திரனின் படுகொலை குறித்துத் தமிழகக் கவிஞர்கள் திரண்டு எழுதிய அஞ்சலிக் கவிதைத் தொடரிலும் புவியரசுவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. இத்தகைய பேராண்மை மிக்க பெரும் கவிஞர் எம் மக்களின் துயரை வெளிப்படுத்தும் ஒவ்வோர் போராட்டக் களத்திலும் நின்ற பெருமைக்குரியவர் அவர்.
அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பு
புவியரசு அவர்கள் அறையினுக்குள் அமர்ந்து கவிதை எழுதியவர் அல்லர்; ஈழத் தமிழர்களுக்காகக் களத்திலும் நின்றவர். தனது மார்க்சிய, முற்போக்குச் சிந்தனைகளின் வழியே ஈழப் பிரச்சினையை அணுகியவர்.
ஈழத் தமிழர்களின் இரத்தம் முள்ளிவாய்க்காலில் உறைந்திருந்த சூழலில், தமிழகத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை, "இது தமிழர்களுக்கான மாநாடு அல்ல, அரசியல் மாநாடு" என்று கூறி, கோவை மண்ணிலிருந்து முதன்முதலாகப் புறக்கணிப்பதாகத் துணிச்சலாக அறிவித்தவர் புவியரசு அவர்கள். இது எமது மக்களின் துயரை நெஞ்சில் தாங்கிய அறச்சீற்றம் என்பதே எம்போன்றோர் அவர்மீதான அன்புக்கு அடிமையாக்கியது.
ஈழ மக்களின் உரிமைக் குரலுக்கு மதிப்பளித்து அவர் எடுத்த இந்த முடிவு இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமானது. கோவையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் மற்றும் உண்ணாவிரத அறப்போராட்டங்களில் அவர் தொடர்ந்து பங்கேற்றுத் தனது கணீரென்ற குரலால் உரையாற்றினார். அந்தப் போராட்ட மேடைகளை வைசுமந்த தேசத்தின் வரலாற்றை பதிவுசெய்யும் களமாகவே பயன்படுத்தினார்.
அவர் ஒருவகையில் ஈழத்து இலக்கியவாதிகளின் புகலிடமாகவே விளங்கினார். ஈழப்போர் காரணமாகத் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்த பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குப் புவியரசு அவர்களின் இல்லம் ஒரு புகலிடமாக விளங்கியது. அவரின் நிழலில் இளைப்பாறிய பலர் அவரை மறந்தது தனிக்கதை.
(இவர்கள்தான் இன்று கனடா அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் பிறதேசங்களிலும் தம்மை ஜாம்பவான்களாக காட்டிக்கொள்ளும் முகமூடிகளாகிப் போனது ஓர் வரலாற்றுத் துயரமே.)
கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு, தமிழ் கவிதை உலகிற்கு மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டக் குரலுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவர் உடலால் நம்மை விட்டுப் பிரிந்தாலும், ஈழத்துக்காக அவர் சிந்திய கண்ணீரும், வடித்த கவிதை வரிகளும், காட்டிய மனிதநெறியும் காலத்தால் அழியாதவை.
தன் வாழ்நாளெல்லாம் மானுடத்தின் விடுதலையையும் தமிழரின் தன்னுரிமையையும் பாடிய அந்தப் பெருங்கவிஞனின் நினைவுகளுக்கு ஈழத்தமிழினத்தின் சார்பில் வீரவணக்கத்தையும், ஆழ்ந்த அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறோம்.
அவரது கவிதைகள் ஈழத்தின் விடியல் நோக்கிய பயணத்தில் என்றும் ஒளிரும் தீபமாக இருக்கும்.
0 Comments