"நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக"
இமயம் அப்பாவும், செந்தமிழன் மகனும் — ஒரு தலைமுறை உறவின் கதை
பாரதிராஜா உடலுக்கு "அப்பா" என்று அழுதபடியே அஞ்சலி செலுத்தினார் சீமான். 💔 சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு கலாச்சார இயக்கம். அந்த இயக்கத்தின் இரு முனைகளில் இரு ஆளுமைகள் — இயக்குணர் இமயம் பாரதிராஜா அவர்களும், செந்தமிழன் சீமான் அவர்களும்.
பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமாவில் கிராமிய யதார்த்தத்தையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும் உயர்த்தினார். சீமான் அவர்கள் அந்தக் குரலை தமிழ்த்தேசிய அரசியலாக மாற்ற முயல்கிறார். "அப்பா" என்று அழைத்த சீமான், பாரதிராஜாவின் இறுதி நாட்களில் அவர் அருகில் இருந்தார். அந்த உறவு வெறும் இயக்குநர்-உதவியாளர் உறவு அல்ல, மாறாக, ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உணர்ச்சிப் பிணைப்பு.
ஆனால் இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: பாரதிராஜா அவர்கள் விட்டுச் சென்ற மண்ணின் மணம், சமூக நீதி, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை ஆகியவற்றை சீமான் தன் அரசியலில் எந்த அளவுக்கு உள்வாங்குகிறார் என்பதே அந்தக் கேள்வியாகும்.
சினிமாவிலிருந்து வந்து அரசியல் ஆளுமையாக மாறிய சீமான்! இயக்குணர் இமயம் பாரதிராஜா அவர்கள் தமிழ் மக்களின் வாழ்வியல் துயரைப் படமாக்கினார். சீமான் அவர்கள் அதை தமிழ்த்தேசிய உணர்வாக மாற்ற முயல்கிறார். இயக்குணர் இமயம் தமிழீழ மக்களை, தலைவர் பிரபாகரன் அவர்களை, தமிழீழத் தாய்த் திருநாட்டை நேசித்தார். அந்த மக்களுக்காக குரல்கொடுத்தார், களப்பணியாற்றினார், தமிழீழ விடுதலைக்கான சுதந்திர வேட்கையை நெஞ்சில் சுமந்தபடி இறுதிவரை உறுதியோடு நின்றார்.
அதுபோல் செந்தமிழன் சீமான் அவர்களும் தலைவரை, தமிழீழ மக்களை, தமிழீழ மண்ணை நேசித்தார். அதற்காக பல வடுக்களை, வலிகளைச் சுமந்தார். தமிழீழத் தேசியத் தலைவரை தன் வழிகாட்டியாக ஏற்று தமிழ்நாட்டின் எல்லாத் திசைகளிலும் சித்தாந்தப் போர்புரிந்தார். தமிழ்த்தேசியத்தின் போர்வாளாய் தொடர்ந்தும் தமிழ்ச் சமூகத்துக்குள் விடுதலைக் கணலை அணையாது பாதுகாக்கப் போராடி வருகின்றார்.
ஆனால் அந்த மாற்றத்தில் திராவிட இயக்கத்தின் சமூக நீதியை விட்டுவிட்டு, உணர்ச்சி அரசியலை மட்டும் முன்னெடுப்பதா என்று என் போன்றோர் சீமான் அவர்களை தொடர்ந்தும் விமர்சித்தே வந்திருக்கின்றோம். ஆனாலும் அவரின் கொள்கை உறுதி, அவர் கொண்டுள்ள தமிழ்த்தேசியப் பற்று அவர் மீது எம்மை இழுத்துச்செல்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
இமயம் அப்பா இல்லாத இந்த இடத்தில், செந்தமிழன் மகன் தன் பயணத்தைத் தொடர வேண்டும் — அறிவியல், ஒற்றுமை, சமூக நீதி ஆகியவற்றுடன் கூடிய பயணமாக.
கடந்த 2018 ஆம் ஆண்டில் 'நாம் தமிழர்' கட்சி நடத்திய வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிராஜா அவர்கள், "நீண்ட இடைவெளிக்குப் பின் புறப்பட்டுள்ள அக்னிக்குஞ்சு சீமான். வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது ஈழத்தில் இல்லை. அவன் மறு அவதாரமாக தமிழகத்தில் இருக்கிறான். சீமானின் பேச்சில் பொருள், அர்த்தம் இருக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் அனைவரும் சரியான பாதையில் செல்கிறீர்கள்" என்று பேசியிருந்தார்.
பாரதிராஜாவை சீமான் அவர்கள் அப்பா என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார். அதை வெளிப்படுத்தும் வகையில் பாரதிராஜா அவர்களும் மேடையில் சீமான் அவர்களை 'என் பிள்ளை' என்று பேசியிருப்பார்.
பாரதிராஜா பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீமான் அவர்கள், "படப்பிடிப்பின்போது நள்ளிரவில் பாரதிராஜா ரசம் சோறு கேட்பார். கிராமத்தில் ஏதாவது ஒரு வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டு வாங்கி வருவோம். இரவு 2 மணிக்கு படுத்தாலும் காலை 5 மணிக்கு எழுந்து படப்பிடிப்புக்குத் தயாராகிவிடுவார்" என்று பாரதிராஜாவைப் பற்றி பகிர்ந்திருந்தார்.
பாரதிராஜா உடலுக்கு "அப்பா" என்று அழுதபடியே அஞ்சலி செலுத்தினார் சீமான். 💔
இன்றைய தமிழ் நாடு சினிமா மோகம், நாயக பிம்பம், மாயாஜாலங்கள் நிறைந்த தத்துவப்பிறழ்வுடனேயே பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நாயக அரசியல் சகதிக்குள் கட்டுண்ட தமிழ்ச்சமூகத்தை தமிழ்தேசிய அரசியல் களத்துக்கு மீட்டுவர வேண்டிய பொறுப்பும் கடமையும் சீமானின் கரங்களிலேயே தங்கியுள்ளது.
அந்தக் கடமையை முன்பைவிட இன்று அவர் மென்மேலும் செழுமைபடுத்துகின்ற போதுதான் அப்பா இயக்குணர் இமயத்துக்கு உண்மையான அஞ்சலி செலுத்த முடியும். அந்த நம்பிக்கை வீண்போகாமல் செந்தமிழன் சீமான் அவர்கள் முன்னெடுப்பார் என்றே நம்புகின்றோம்.
பாரதிராஜா அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.
அவரது படைப்புகள் தொடர்ந்து தமிழ் மக்களின் உள்ளத்தில் வாழும்.
உன் குரல்;
"என்றென்றும் எம் செவிகளுக்குள் நிலைத்திருந்து பரணிபாடும்"
0 Comments