எழுத்தாளர் சோ. பத்மநாதன் அவர்களின் தமிழ்ப்பணியும் ‘சாகித்திய ரத்னா’ விருதும்
விருது என்பது ஒரு மனிதனை அலங்கரிக்கும் பதக்கம் மட்டும் அல்ல. நீண்டகாலம் மொழியோடு வாழ்ந்த ஒருவரின் உழைப்பைச் சமூகம் அங்கீகரிக்கும் தருணம். எழுத்தாளர் சோ. பத்மநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘சாகித்திய ரத்னா’ விருது அத்தகைய தருணம்.
யாழ்ப்பாணம் சிப்பித்தறையில் 1939 செப்டம்பர் 14 இல் பிறந்த இவர், ஆசிரியர், அதிபர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் தமிழுக்குப் பணி செய்தவர். பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராகப் பணியாற்றிய காலமும், ஆங்கில ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் கழித்த ஆண்டுகளும் இவரது இலக்கிய வாழ்க்கையின் அடித்தளமாக அமைந்தன. பாடசாலை அறைக்குள் நின்ற ஆசிரியர், பின்னர் மொழிகளுக்கு இடையே பாலம் அமைக்கும் கவிஞராக மாறினார்.
சோ. பத்மநாதனின் தமிழ்ப்பணி வெறும் சுயகவிதைகளின் தொகுப்பு அல்ல. ‘வடக்கிருத்தல்’, ‘நினைவுச்சுவடுகள்’, ‘சுவட்டெச்சம்’ போன்ற கவிதைத் தொகுதிகள் யாழ்ப்பாணத்தின் நிலமும் மனிதரும் போரும் பிரிவும் உருவாக்கிய உளநிலையைச் சொற்களாக மாற்றின. ஆனால் இவரது பெரும்பணி மொழிபெயர்ப்பு. ஆபிரிக்கக் கவிதைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்ததும், தென்னிலங்கைச் சிங்களக் கவிதைகளைத் தமிழுக்குத் திறந்ததும், வடக்கின் தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றதும் ஒரே நோக்கத்தின் வெவ்வேறு முகங்கள். போர் பிரித்த மொழிகளை இலக்கியம் மீண்டும் சந்திக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையே இவரது பணியின் அச்சாணி. மகாகமசேகரரின் ‘பிரபுத்த’, மோனிகா ருவன்பத்திரானாவின் கவிதைகள், கமலா விஜேரத்னேயின் படைப்புகள் எனச் சிங்கள உள்ளத்தின் குரலைத் தமிழ் வாசகன் கேட்க வைத்தார். அதே வேளையில் ஈழத்துத் தமிழ்க் கவிதையை உலக வாசிப்புக்குக் கொண்டுசென்றார்.
இந்தப் பணி எளிதானது அல்ல. மொழிபெயர்ப்பு என்பது சொல்லைச் சொல்விருது ஒருவரை முடித்துவிடாது. அது அவரை மீண்டும் வாசிக்க வைக்கும். சோ. பத்மநாதனை வாசிப்பது என்பது யாழ்ப்பாணத்தின் வயல்வெளியையும், போரின் நிழலையும், மொழிகளுக்கு இடையேயான பாலத்தையும் வாசிப்பது. தமிழ் இலக்கியம் தனக்குள்ளேயே சுருங்கிவிடாமல், பிற மொழிகளின் அனுபவத்தையும் தன் உடலுக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவரது வாழ்க்கைச் சொல். ‘சாகித்திய ரத்னா’ அந்தச் சொல்லுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம். விருது அவரைச் சிறப்பிக்கிறது. ஆனால் அவரது பணி தமிழைச் சிறப்பிக்கிறது.
0 Comments