பாரிஸ் தேர்த்திருவிழா பறைசாற்றிய தமிழீழத் தேசிய உணர்வும் தேசியக்கொடியின் அரசியல் அடையாளமும்

தமிழரின் இரத்தத்தில் கலந்த தமிழீழத் தேசியக்கொடி: பாரிஸ் தேர்த்திருவிழா பறைசாற்றிய மாவீரர் தியாகமும் தலைவரின் இலட்சியக் கனவும்

✍ கிருஸ்ணா அம்பலவாணர்

அண்மையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத் தேர்த்திருவிழாவானது, வெறும் ஒரு ஆன்மீக நிகழ்வாகக் கடந்துபோகாமல், உலகளாவிய புவிசார் அரசியலில் தமிழினத்தின் தேசிய இறையாண்மையையும் சமரசமற்ற விடுதலை உணர்வையும் உலகிற்குப் பிரகடனம் செய்த ஒரு பெரும் தத்துவார்த்தக் களமாக மாறியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்களும், பெருந்திரளான பிரெஞ்சு நாட்டு மக்களும் கலந்துகொண்ட இவ்விழாவில், பாரிஸ் மாநகரின் வீதிகள் யாவும் தமிழர் பண்பாட்டு அடையாளத்தோடு விழாக்கோலம் பூண்டிருந்தன. இந்த உன்னதமான மக்கள் திரளுக்கு மத்தியில், விண்ணதிரப் பறந்த தமிழீழத் தேசியக்கொடியான புலிக்கொடி, உலகெங்கும் வாழும் தமிழர்களைத் தன்னாதிக்க நிமிர்வுகொள்ள வைத்துள்ளது. காலமும் களங்களும் மாறினாலும், ஈழத்தமிழர்களுக்கான ஏகப் பிரதிநிதித்துவ அடையாளம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான் என்பதையும், அவர்களின் இறையாண்மைக் கனவு புலம்பெயர் தேசங்களின் இளந்தலைமுறையினரின் இரத்தத்தில் கலந்தவொரு தேசியப் பிரக்ஞை என்பதையும் இந்நிகழ்வு பிரான்ஸ் மண்ணிலிருந்து உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.

பாரிஸ் ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத் தேர்த்திருவிழா
பாரிஸ் ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத் தேர்த்திருவிழா — பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் திரண்ட காட்சி

தமிழீழத் தேசியக்கொடி என்பது வெறும் துணியால் தைக்கப்பட்ட ஒரு குறியீடு அல்ல; அது முள்ளிவாய்க்கால் வரை எமது தாய்நிலத்தின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் உன்னதமான தியாகத்தினால் நனைக்கப்பட்டு உருவான தமிழினத்தின் இரத்தச் சின்னமாகும். எமது தார்மீக வழிகாட்டி, தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் எவ்விதச் சமரசமுமின்றித் தன் நெஞ்சில் சுமந்த இலட்சியக் கனவின் வடிவமே இந்தத் தேசியக்கொடியாகும். தாயகத்தில் பாயாசம் குடித்துவிட்டுப் பதுங்கிக் கொள்ளும் அற்ப அரசியல்வாதிகளைப் போலன்றி, காடுகளிலும் களங்களிலும் பசியோடும் பட்டினியோடும் நின்று எமது நிலத்தின் இறையாண்மைக்காகக் குருதி சிந்திய மாவீரர்களின் மூச்சுக்காற்றே பாரிஸ் மாநகர வீதிகளில் இன்று பட்டொளி வீசிப் பறந்த புலிக்கொடியை இயக்கும் உந்துசக்தியாகும். தலைவரின் இலட்சியக் கனவான இறையாண்மையுள்ள தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கை என்பது நேற்றைய வரலாற்றோடு முடிந்துபோன ஒன்றல்ல; அது உலகமயமாக்கல் மற்றும் நுகர்வுப் பண்பாட்டின் மத்தியிலும் புலம்பெயர் இளந்தலைமுறையினரின் நனவிலி மனதில் ஒரு நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது என்பதை இதேர்த்திருவிழா சர்வதேச சமூகத்திற்குத் துல்லியமாக உணர்த்தியுள்ளது.

வெறும் அனுதாப அரசியலை நிராகரித்து, பன்னாட்டுச் சட்டங்களின் முரண்பாடுகளைத் தோலுரிப்பதும், உலகளாவிய ஒன்பது கோடி தமிழர்களின் கூட்டுப் பிரக்ஞையை ஓர் அதிகாரச் சக்தியாக மாற்றுவதுமே எமது தத்துவார்த்த அறைகூவலாகும்.

சர்வதேச நாடுகள் என்று தங்களை விவரித்துக் கொள்ளும் உலக வல்லரசுகளும், ஐநா உள்ளிட்ட அமைப்புகளும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் மனித உரிமைப் போராட்டங்களையும், அவர்களின் தன்னாதிக்கக் கோரிக்கைகளையும் எப்போதுமே தங்களின் சொந்த வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் நலன்களுக்கு ஏற்பவே பயன்படுத்தி வருகின்றன. 2009 முள்ளிவாய்க்கால் கூட்டு இனப்படுகொலையின் போது, கொழும்பு அரசுக்குத் தேவையான அனைத்து இராணுவ மற்றும் ராஜதந்திர உதவிகளையும் வழங்கிவிட்டு, இன்று வெறும் மனித உரிமைப் போர்வையில் நாடகமாடும் சர்வதேசக் கட்டமைப்புகளுக்கு மத்தியில், பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் தமிழர்கள் காட்டிய இந்தத் தேசிய நிமிர்வு ஒரு மிக முக்கியமான இராஜதந்திரப் பதிலடியாகும். எமது மாவீரர்களின் தியாகங்களினாலோ அல்லது தலைவரின் இலட்சியக் கனவினாலோ உருவான எமது தாயகம், தேசியம், தன்னாட்சி (சுயநிர்ணயம்) ஆகிய உன்னதமான அரசியல் கோரிக்கைகளைச் சர்வதேச அரங்கில் எந்தவொரு சக்தியாலும் இனிமேலும் மூடி மறைக்க முடியாது. வெறும் அனுதாப அரசியலை நிராகரித்து, பன்னாட்டுச் சட்டங்களின் முரண்பாடுகளைத் தோலுரிப்பதும், உலகளாவிய ஒன்பது கோடி தமிழர்களின் கூட்டுப் பிரக்ஞையை ஓர் அதிகாரச் சக்தியாக மாற்றிச் சர்வதேசத்தின் முகமூடிகளைக் கிழிப்பதும், எமது இரத்தத்தில் கலந்த தேசியக்கொடியின் கீழ் உலகத் தமிழினத்தை உரிமைப் பாதையில் வழிநடத்துவதுமே 'எழுகதிர்' வாயிலாக நாம் உலகிற்கு விடுக்கும் தத்துவார்த்த அறைகூவலாகும்.

கி
கிருஸ்ணா அம்பலவாணர்
ஈழத்தமிழன் | திராவிடத் தமிழ்த்தேசிய சிந்தனையாளன்
🚩 பாரிஸ் தேர்த்திருவிழா · தமிழீழத் தேசியக்கொடி · எழுகதிர்

Post a Comment

0 Comments